News Just In

1/29/2025 03:16:00 PM

பிரதேச அபிவிருத்தியில் பங்களிப்புச் செயவதற்காக இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சிகள்!

பிரதேச அபிவிருத்தியில் பங்களிப்புச் செயவதற்காக இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சிகள்.


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

செயற்பாடு, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட இளைஞர் யுவதிகளை மாற்று முகவர்களாக உருவாக்கும் திட்டத்தின் கீழ் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 40 இளைஞர் யுவதிகள் பல வேறுபட்ட பயிற்சிகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி வலுவூட்டல் செயற்திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.

இவ்வாறானா பயிற்சிநெறி கிரானில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. செயலமர்வில் தெரிவு செய்யப்பட்ட 40 இளைஞர் யுவதிகளோடு பிரதேச செயலக இளைஞர் அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர், இளைஞர் சம்மேளன அலுவலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

செயலமர்வில் வளவாளராகக் கலந்து கொண்ட அனுலா, இத்திட்டம் பற்றி மேலும் கூறியதாவது, கிரான் பிரதேச செயலாளர் பிரிவைப் பொறுத்தவரையில் அங்கு இளைஞர் யுவதிகளின் சமூகப் பங்கேற்பு குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது.

இந்த நிலைமை, பிரதேச அபிவிருத்தியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்த விடயத்தில் அதிக அக்கறை எடுத்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கும் எமது திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம்.

ஏற்கெனவே கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காலநிலையை அடிப்படையாகக் கொண்ட சிசிஐஆர் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்ட்டு வருகின்றன.

அதற்கு மேலதிகமாக, இளையோரை வலுவூட்டுவதன் மூலம் பிரதேச அபிவிருத்தி சிறப்படையும். தற்காலத்திலுள்ள தொழினுட்ப வளர்ச்சி, பொருளாதாரச் சிக்கல், கல்வி அடைவு மட்டம் என்பனவற்றிற்கு முகம் கொடுக்கும் வண்ணம் இளைஞர் யுவதிகளைத் தயார்படுத்திக் கொண்டு பிரதேசத்தின் ஒட்டு மொத்த அபிவிருத்தியை நோக்கிச் செல்வதே இதன் நோக்கமாகும்.

ஏனென்றால், இளையோர் சமுதாயத்தினரால் மட்டுமே சாதகமான சமூநல மாற்றங்களைத் துரித கதியில் கொண்டு வர முடியும். ஆகவே அதிக சாதக மாற்றங்களைக் கொண்டு வரும் மனித வளமாகவும் மனித வலுவாகவும் இளைஞர் யுவதிகள் கருதப்படுகிறார்கள்.

அதனடிப்படையில், இளைஞர் கழகங்களை ஸ்தாபிப்பதனைக் கொண்டு இந்த செயற்பாடுகளின் துவக்கம் ஆரம்பிக்கிறது. பங்குபெறும் இளைஞர் யுவதிகளுக்கு பல்வேறு செயற்திட்டப் பயிற்சிகளை வழங்கி அவர்களை அறிவு, ஆற்றல், செயற்பாடு மிக்கவர்களாக மாற்றவுள்ளோம்.

செயற்பாட்டினூடாக வளர்ச்;சியைக் காணுதல் என்பது இதன் தொனிப் பொருளாகும். தொழினுட்ப வளர்ச்;சியின் காரணமாக தனி மனிதச் செயற்பாட்டுப் பொறிமுறைக்குள் இளைஞர் யுவதிகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள். அதனால் சமூகப் பங்கேற்பு என்பது பின்னடைவை நோக்கிச் செல்கின்றது. இதனை அறிவூட்டி விழிப்புணர்வடையச் செய்வதும் இதன் நோக்கமாகும். தொடர்ச்சியான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும்.

அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தினால் அமுலாக்கம் செய்யப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு சைல்ட் பண்ட் நிறுவனம் நிதி அனுசரணை வழங்குகின்றது.

No comments: