News Just In

12/07/2024 06:29:00 PM

மதுபானசாலை அரசியல்!

மதுபானசாலை அரசியல்



வடக்கு, கிழக்கில் வழங்கப்பட்ட மதுபான சாலைகளுக்கான அனுமதி தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு, தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாராளுமன்றத்தில் கேள்வி யெழுப்பியிருந்தார். சரி நாங்கள் நாளையே வெளியிடுகின்றோம் என்று அரசாங்க அமைச்சரும் தெரிவித்திருந்தார்.

அதன்படி எந்த மாவட்டத்துக்கு எத்தனை மதுபானசாலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்னும் தகவல்கள் வெளியாகியிருக்கி;ன்றன. வடக்கு, கிழக்கில் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் இருப்புக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறுவிதமான பிரச்னைகள் தொடர்பில் குரல் எழுப்பி வந்த, தமிழ் (தேசிய) அரசியல்வாதிகள் இன்று வடக்கு, கிழக்கிற்கு எத்தனை மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது, அதனை யாருக்கு வழங்கினார்கள் என்னும் தகவல்களை கோரிவருகின்றனர்.

தங்களுக்குள் இருக்கும் சிலரை தோற்கடித்து, அவர்களை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்காகத்தான் அதனையும் கோருகின்றனர் – மக்களின் நன்மைக்காக அல்ல – ஏனெனில் தேர்தல் காலத்தில் தங்களின் வெற்றிக்காக அரசியல்வாதிகள் மது பானம் வழங்குவதையும் மக்கள் அறிவார்கள். உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள், இன்று மதுபான சாலைகள் தொடர்பில் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்றால் – இது யாருடைய கெட்டித்தனம். ரணில் விக்கிரமசிங்க அதிகார அரசியலிலிருந்து வெளியேறினாலும் கூட, அவரால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் அதிர்வுகளிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளால் இன்னும் விடுபட முடியவில்லை – தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.

மதுபான சாலைகள் தொடர்பான விவரங்கள் எதற்காக கேட்கப்படுகின்றன? ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழ் அரசியல் வாதிகளை தங்கள் பக்கம் எடுக்கும் நோக்கில் சலுகையாக, மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை ரணில் வழங்கியிருக்கின்றார். அது ஒரு வகையில் அரசியல் கையூட்டுத்தான். ஆனால் இலங்கைத் தீவின் அதிகார அரசியலில் இவ்வாறான அரசியல் கையூட்டுக்கள் முதலும் அல்ல – அதேபோல் இறுதியுமல்ல. நாடாளுமன்ற தேர்தல் பிரசார காலத்தில் மதுபானசாலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடப் போவதாக அநுரகுமார திஸநாயக்க தெரிவித்திருந்தார்.

ஆனால் வடக்கு, கிழக்கில் குறித்த மதுபான சாலைகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்னும் தகவல் ஆதாரபூர்வமாக இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஒரு வகையில் ரணிலின் தந்திரத்தை இன்னொரு வகையில் அநுர தொடர்கின்றார் போன்றே தெரிகின்றது. அநுரகுமார திஸநாயக்க எண்ணினால் குறித்த விவரங்களை வெளியிடுவது சாதாரண விடயம். ஆனாலும் குறித்த சில தமிழ் அரசியல்வாதிகள், தங்களுடைய எதிர்கால நகர்வுகளுக்கு தேவைப்படலாம் என்பதாலேயே, அநுர குமார விடயங்களை வெளிப்படுத்தாமல் தாமதித்துவருகின்றார்.

அநுர இந்த விடயத்தில் தாமதிப்பதை அல்லது தவிர்ப்பதை வேறு எந்த அடிப்படையில் விளங்கிக்கொள்வது? மதுபானசாலைகள் தொடர்பில் தமிழ் தேசியம் பேசும் அரசியல் வாதிகள் அடிக்கடி பேசுவதானது, தமிழ் சமூகத்துக்கு பெருமையல்ல – உண்மையில் சிறுமை. பல்லாயிரக்கணக்கான உயிர்களை முதலீடு செய்து, கட்டிக்காப்பாற்றிய தமிழர் விடுதலை அரசியலானது, இன்று எந்த இடத்தில் வந்து நிற்கின்றது? ஈழத் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய திட்டங்கள் தொடர்பில் சிந்திக்கவேண்டிய தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மதுபானத்திற்குள் முடக்கியிருப்பதும் கூட, சிங்கள இராஜதந்திரத்தின் வெற்றிதான்
.நன்றி ஈழநாடு 

No comments: