News Just In

12/19/2024 12:57:00 PM

மாவையின் தலைமைப் பதவி விவகாரம்! யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு!

மாவையின் தலைமைப் பதவி விவகாரம்! யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பான வாக்கெடுப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் அதை இடைநிறுத்தித் தடை உத்தரவு பிறப்பிக்கவும், மாவை சேனாதிராஜா தொடர்ந்து கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கவும் உத்தரவிடக் கோரி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களின் விவரம் பற்றிய விடயம் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று சட்டத்தரணிகளோடு ஆலோசனை செய்வதில் மாவை சேனாதிராஜா மும்முரமாக இருந்தார் என்று பிறிதொரு தகவல் தெரிவித்தது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இன்று வெளிவரும் என எதிர்பார்க்கலாம்

No comments: