News Just In

11/29/2024 09:01:00 PM

பெஞ்சல் புயல் 'போக்கு' காட்டியதன் பின்புலம்: வானிலை ஆய்வு மையம், ஆர்வலர்கள் சொல்வது என்ன?

பெஞ்சல் புயல் 'போக்கு' காட்டியதன் பின்புலம்: வானிலை ஆய்வு மையம், ஆர்வலர்கள் சொல்வது என்ன?




கடந்த இரண்டு நாட்களாகவே புயல் போக்கு காட்டி வருவதுதான் பெரும் பேசுபொருளாக இருந்தது. ரெட் அலர்ட் விடப்பட்ட மாவட்டங்களிலும் கூட என்ன மாதிரியான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வது என தெளிவற்ற சூழல் நிலவியது. இந்நிலையில்தான், வெள்ளிக்கிழமை மதியம் வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

உருவானது புயல்... - ”தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, “ஃபெஞ்சல்” புயலாக இன்று (நவ.29) பகல் 2.30 மணிக்கு வலுப்பெற்றது. இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை, காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை (30-ம் தேதி) மதியம் புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஃபென்ஜல் என பெயரிடப்பட்டுள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

போக்கு காட்டியதா ஃபெஞ்சல் புயல்? - இந்நிலையில், இந்தப் புயல் போக்கு காட்டியத? என்று ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ ( https://www.chennairains.com/ ) என்ற வலைப் பக்கத்தை நடத்திவரும் வானிலை ஆர்வலரும், ப்ளாகருமான ஸ்ரீகாந்திடம் முன்வைத்தபோது . அதற்கு அவர், “ஃபெஞ்சல் புயல் சின்னம் நேற்றுமுன் தினம் இலங்கை நிலப்பரப்புக்கு அருகே இருந்தது. இலங்கை கரையின் அருகே அது அவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்று யாரும் கணிக்கவில்லை. அதனால் அது வலுவிழக்கும் சூழல் உருவானது. கிட்டத்தட்ட 24 மணி நேரம் அது இலங்கை கரை அருகேயே கீழிருந்து மேலே நகர்ந்து கொண்டிருந்தது. மேலும் காற்றின் வேறுபாடு காரணமாகவும் அது வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டது.

ஆனால், வலுவிழந்த பின்னர் 6-ல் இருந்து 9 மணி நேரம் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. நேற்று மாலை முதல் படிப்படியாக வடகிழக்கு திசையில் நகர்ந்து இலங்கை நிலப்பரப்புக்கு வெளியே வந்தது. இலங்கை நிலப்பரப்பிலிருந்து வெளியே வந்த பின்னர்தான் அது மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. அவ்வாறு வடகிழக்கு திசையில் நகர்ந்ததால் அதற்கு கூடுதலாக வலுப்பெறும் வாய்ப்பு கிடைத்து திரும்பவும் புயலாக மாறுவதற்கான சாதகமான சூழல் கிடைத்துவிட்டது. தற்போது புயலாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

புயல் வலுவடைவதும், புயல் வலுவிழப்பதும் நேரியல் சமன்பாடுகள் போன்றது அல்ல. இதனை காலநிலை மாற்றத்தோடும் நேரடியாக தொடர்புபடுத்த முடியாது. வர்தா புயல் கரையைக் கடக்கும்போது வலுவிழக்கும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அது கரையைக் கடக்கும்போது வலுவிழக்கவில்லை. சில புயல்கள் கணிப்பதை போல் அல்லாமல் கரையைக் கடக்கும் முன்னர் வலுவிழப்பதும் உண்டு.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம், கடல்பரப்பு மிகவும் வெப்பமாக இருப்பதால், கொஞ்சம் சாதகமான சூழல் கிடைத்தாலும் புயல்கள் வலுப்பெறுவதற்கான அடித்தளம் மிக எளிதாகக் கிடைத்துவிடுறது. பொதுவாக, வடகிழக்குப் பருவமழை காலத்தில் 3-ல் இருந்து 5 காற்றழுத்த தாழ்வு நிலைகளோ அல்லது ஒரு புயலோ உருவாவது இயல்பானதாகவே இருக்கிறது. சில சமயங்களில் புயல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உருவாகிறது. அதன்படி, இந்தமுறை இந்த ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு... - இதற்கிடையில் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும், புதுச்சேரி பகுதியில் மாலை தொடங்கி மழையின் வேகம் அதிகரிக்கும். இரவில் மேலும் அதிகரிக்கும். இந்தப் புயலானது கேடிசிசி பகுதிக்கும், புதுச்சேரிக்கும் அதி கனமழை தரப்போகிறது. குறிப்பாக நாளை (சனிக்கிழமை) மிகுந்த எச்சரிக்கை தேவை. ஞாயிறும் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்று கணித்துள்ளார்.

இதற்கு மேல் சொன்னால்... கூடவே, “இதற்கு மேல் சொன்னால் ஹைப் என்றொரு கூட்டம் வரும். இந்த நாட்டில் நல்லது சொன்னாலும் யோசிச்சுதான் சொல்லணும் போல. என்னை உண்மையாகப் பின்பற்றுபவர்கள், என்னை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பின் தொடர்பவர்களுக்கானது இந்தப் பதிவு. மற்றவர்கள் கடந்து செல்லலாம். இந்தப் புயல் சின்னமானது சென்னையிலிருந்து புதுச்சேரி வரை மழையை கொட்டித் தீர்க்கப் போகிறது. அதனால் கவனமாக இருங்கள். நேற்றைய இரவு ஒரு சிறிய மேகக் கூட்டம் 50 முதல் 60 மில்லிமீட்டர் மழையைத் தந்தது. ஃபெஞ்சல் புயலைப் பொறுத்தவரை எனது பார்வை ஆரம்பத்திலிருந்தே நிதானமாக இருந்துள்ளது. நான் இதை சரியாகக் கணித்தேனா இல்லையால் என்பதை உறுதி செய்து, அதில் பெருமிதம் கொள்வதற்கான தருணமில்லை.

அண்மைக்கால அவதூறுகள் என்னை எனது கணிப்புகளை இன்னும் ஆணித்தரமான சொல்ல வைக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தப் புயல் ஆரம்பத்தில் இருந்தே கணிப்பதற்கு கடினமான ஒன்றாகவே இருக்கிறது. எனது திறமைகள், அனுபவங்களைப் பயன்படுத்தி கணித்துள்ளேன். இது எப்படி மாறுகிறது என்று பார்ப்போம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நல்ல மழை பெய்வதைப் பார்க்கும்போது மற்ற மோசமான நிகழ்வுகள் மறந்துவிடுகின்றன” எனக் கூறியுள்ளார்.

No comments: