.jpeg)
வடக்கு - கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட திலீபனின் 37ஆவது நினைவேந்தல்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் (26) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, இரண்டு மாவீரர்களின் சகோதரியும், முன்னாள் போராளியுமான பெண்ணொருவர் பொதுச்சுடர் ஏற்றினார்.
அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்தி பவனிகள் வந்திருந்தன.
தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments: