வத்தளை பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் டிப்பர் ரக வாகனத்தின் சக்கரத்தில் உள்ள காற்றை பிடுங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றால் 0112 433333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு காவல்துறை போக்குவரத்து பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
குறித்த காவல் அதிகாரியின் செயற்பாடு தொடர்பிலான காணொளி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்ற நிலையில் குறித்த காவல்துறை சார்ஜன்ட் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நகர போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கமால் புஸ்பகுமார பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகர்ப்புற போக்குவரத்துப் பிரிவுக்குட்பட்ட காவல் அதிகாரிகளால் ஏதேனும் அத்துமீறல்கள் பொது மக்களுக்கு இருந்தால் முறைப்பாடு அளிக்குமாறு காவல்துறை ஊடகப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நகர்ப்புற போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளையும், புறக்கோட்டை, கோட்டை, மருதானை மற்றும் கொழும்பை சுற்றியுள்ள 53 காவல் நிலையங்களையும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு காவல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: