News Just In

6/06/2024 01:45:00 PM

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு அறுகம்பே சுற்றுலா பிரதேசத்தில் சிரமதானம்!



நூருல் ஹுதா உமர்

சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற அறுகம்பே கடற்கரை பிரதேசத்தையும் அதனை அண்டியுள்ள சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த சிரமதான நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றது. பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அறுகம்பே ஆட்டோ உரிமையாளர் நலன்புரிச் சங்கம், கிளீன் ஸ்ரீலங்கா அமைப்பு, அறுகம்பே சுற்றுலா பொலிஸ் பிரிவு ஆகிய நிறுவனங்களின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

"தூய்மையான கடற்கரை பிரதேசம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், அறுகம்பே ஆட்டோ உரிமையாளர் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள், கிளீன் ஸ்ரீலங்கா அமைப்பினர், அறுகம்பே சுற்றுலா பொலிஸ் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது அறுகம்பே கடற்கரை பிரதேசத்தில் காணப்பட்ட பொலிதீன்கள், திண்மக்கழிவு பொருட்களை துப்பரவு செய்யப்பட்டு அகற்றப்பட்டதுடன் டெங்கு பெருகும் இடங்களும் அழிக்கப்பட்டது. மேலும் கடற்கரை பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தடைகளும் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: