News Just In

6/07/2024 01:53:00 PM

வடக்கில் மீளப்பெறப்பட்ட ஆசிரியர் நியமனம்!




வடக்கு மாகாண நிர்வாகத்தின் அசண்டயீனம் காரணமாக ஆசிரியர் நியமனம் பெற்ற பெண் ஆசிரியை ஒருவரின் நியமனம் மீளப்பெறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  வடக்கில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது, ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட நியமனம் மீளப் பெறப்பட்ட சம்பவம் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை ஆசிரியர் நியமனத்துக்கு உள்வாங்குவதற்கான நேர்முகத்தேர்வு இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து, புள்ளிகள் வெளியிடப்படாமல் நியமனத்துக்கு உள்வாங்கப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டது.

இதற்கமைய, வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பட்டதாரி ஒருவரும் ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்கப்பட்டார்.

இந்நிலையில், நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது.

இதன்போது, நியமனம் கிடைத்த ஆசிரியை ஒருவரின் நியமனம் தவறானது என தெரிவித்து அவரது நியமனம் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மீளப்பெறப்பட்டுள்ளது.

பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளும் நேர்முகத் தேர்வு கிழக்கு மாகாணத்திலும் இடம்பெற்ற நிலையில் நியமன கடிதங்கள் வழங்குவதற்கு முன்னரே அவர்கள் பெற்ற புள்ளிகள் மாகாணப் பொதுச் சேவை ஆணைகுழுவினால் வெளியிடப்பட்ட நிலையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் வெளியிடப்படாமை குறிப்பிடத்தக்கது.

No comments: