News Just In

6/23/2024 05:41:00 AM

ஐ.நாவின் வெளியக பொறிமுறையை மீண்டும் நிராகரித்த இலங்கை!




ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் (UNHCR) தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறையை இலங்கை (Sri Lanka) மீண்டும் நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் இந்த பொறிமுறை பயனற்றது என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக (Himalee Arunatilaka) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறை இலங்கையில் சமூகங்களை பிரிக்கவும் துருவமயப்படுத்தவும் மாத்திரம் உதவும் என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த பொறிமுறையால் யாருக்கும் எந்தவொரு குறிப்பிடத்தக்க நன்மைகளும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், உறுப்பு நாடுகளின் வளங்கள் வீணடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள சவாலான மனித உரிமை சூழ்நிலைகளை பாரபட்சமற்ற விதத்திலும் தேர்ந்தெடுக்கப்படாத தன்மை மற்றும் இரட்டை நிலைப்பாடுகளை தவிர்த்தும் ஐ.நா மதிப்பிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கோட்பாடுகளுக்கு முரணாண தன்னிச்சையான செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கிறது எனவும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு உறுப்பு நாடுகள் வழங்கிய ஆணைக்கு முரணானது எனவும் ஹிமாலி அருணதிலக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை அரசியல் மயப்படுத்தி அதன் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: