
தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு டிவி சேனல் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. அவருடன் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாயனும் உயிரிழந்தார்.
முன்னதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதன் பாகங்கள் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் காணப்பட்டன. இந்தச் சூழலில் விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக அந்த நாட்டு ஊடக நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
“ஈரான் அதிபர் ரெய்சி, வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாயன், கிழக்கு அசர்பைஜான் ஆளுநர் மலேக் ரஹ்மானி, கிழக்கு அசர்பைஜானின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கான இமாம் முகமது அலி அலே-ஹஷேம் உள்ளிட்ட பலர் ஈரானின் வடமேற்குப் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர்” என்று எக்ஸ் சமூகவலைதளத்தில் ஈரான் ஊடகம் ஒன்று பதிவிட்டுள்ளது.
இதனையடுத்து ஈரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஜாரிஃப் சமூக வலைதளத்தில் இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ளார். “எனது சகோதரர் ஹுசைன் அமீர் அப்துல்லாயன், அதிபர் இப்ராஹிம் ரெய்சி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அஜர்பைஜான் நாட்டுக்குச் சென்ற அதிபர் ரெய்சி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. சுமார் 17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் முழுவதும் தீயில் கருகி உருக்குலைந்து காட்சி அளிக்கிறது.

விபத்து நிகழ்ந்த இடம் வனப்பகுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனி சூழ்ந்த வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்த இடத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்தது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடம் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் சிக்கியவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்ற அதிர்ச்சியான செய்தியை ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் தெரிவித்துள்ளனர்.
ட்ரோன் மட்டுமல்லாது சாட்டிலைட் தொழில்நுட்பமும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை அடையாளம் காண உதவியது. சம்பவ இடத்தில் ஈரான் ராணுவம், மீட்புப் படையினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் உள்ளனர். ஹெலிகாப்டர் மலை மீது மோதி முழுவதுமாக உருக்குலைந்துள்ளது. அவரது மறைவு அந்த நாட்டு மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் ஈரான் உடன் இந்த நேரத்தில் நிற்பதாக தெரிவித்துள்ளன
No comments: