News Just In

5/15/2024 11:50:00 AM

பலஸ்தீன விடயத்தில் அமெரிக்காவின் நிறைவேற்று அதிகாரம் கெடுதியின் பக்கமே உள்ளது : ஆபத்துக்கு உதவிய பலஸ்தீனர்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். - ஹரீஸ் எம்.பிநூருல் ஹுதா உமர்

தென் சூடானில் தனிநாட்டு கோரிக்கையுடன் சூடானில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றபோது ஐந்து வருடங்களில் தென்சூடானை ஸ்தாபித்து கொடுத்த அமெரிக்கா இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு திமோரை பிரித்து கொடுத்தது. இப்படி இஸ்லாமிய நாடுகளில் குழப்பம் உருவாகும் போது அந்த நாடுகளை துண்டாட பின்னணியில் இருக்கும் அமெரிக்கா ரசித்து ருசித்து செய்கிறது. ஆனால் பாலஸ்தீனில் முஸ்லிம் நாடு என்பதற்காக அதிகாரத்தின் உச்சவரம்பை அமெரிக்கா பலஸ்தீன் மீது திணித்து தனது நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது என பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (14) உரையாற்றிய அவர். தொடர்ந்தும் அங்கு உரையாற்றும் போது,

பலஸ்தீன் றபா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் காஸா மக்களை லட்சக்கணக்கில் ஈவிரக்கமின்றி கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஈனச்செயலை இந்த நாட்டு மக்களும், இலங்கை பாராளுமன்றமும் கண்டிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஒத்திவைப்பு பிரேரனை கொண்டு வரப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வாழ்ந்த யூத மக்களை ஹிட்லர் கொன்று குவித்த போது கப்பல்களில் தப்பி ஓடிவந்த அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மனிதாபிமானிகளாக முன்வந்து பலஸ்தீன முஸ்லிங்கள் அடைக்கலம் கொடுத்தார்கள். மேற்கத்தைய நாடுகள் அதிலும் குறிப்பாக வின்சட் சேர்சில் தலைமையிலான பிரித்தானிய அரசு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் அன்று சகுனி வேலை செய்து இஸ்லாமிய பேரரசுகளை வீழ்த்தி, அரபு நாடுகளுக்குள் குழப்பத்தை உண்டாக்கி தமது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனுக்கு மிக அண்மையில் இருக்கத்தக்கதாக தூரத்தில் இருந்த பலஸ்தீனில் அந்த அகதிகளை குடியமர செய்தார்கள்.

இன்று காஸாவில் இடம்பெறும் மனிதப்படுகொலைகளை பார்க்கும் போது இஸ்லாமியர்களையும், இஸ்லாமிய நாடுகளையும் அழிக்க மேற்கத்தைய சக்திகள் செய்த சதி தெளிவாக விளங்குகிறது. ஐ.நாவில் இருக்கும் பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் பேரவை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்றவைகள் நவீன தொழிநுட்பத்தின் வாயிலாக நேரடியாக அங்கு இஸ்ரேல் இராணுவம் பெண்களையும், சிறுவர்களையும் கொன்று அழித்துக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதனிடையே அவற்றை கண்டித்து தென்னாபிரிக்கா சட்டநடவடிக்கைக்கு சென்றது. அங்கிருந்த நீதிபதிகள் இஸ்ரேலிய பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், படை தளபதிகளுக்கு பிடிவிறாந்து அறிவிக்க முற்பட்ட போது நிறைவேற்று சக்திகொண்ட அமெரிக்கா அதை தடுத்து வைத்துள்ளது.

இதனூடாக முஸ்லிம் நாடுகளை அழித்து, முஸ்லிங்களை கொல்லுவோம் என்ற செய்தியை அமெரிக்கா கூறியுள்ளது. எங்களை நோக்கியோ அல்லது இஸ்ரேலை நோக்கியோ யாரும் விரல் நீட்ட கூடாது. யாரும் இஸ்ரேலுக்கு எதிராக செயற்பட முடியாது என்று கூற முனைந்துள்ளது. 30 கோடி மக்கள் உள்ள அமெரிக்காவுக்கு உலகம் அடிபணிவதா அல்லது 700 கோடி மக்கள் தாம் சுயமாக சிந்திப்பதா? என்று நிலைக்கு உலகம் இன்று தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர். கடந்த வாரம் கூட 136 நாடுகள் பலஸ்தீன ராஜ்ஜியத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. ரஸ்யா,சீனா போன்ற நாடுகள் பலஸ்தீனுக்கு ஆதரவாக இருக்கும் சூழ்நிலையில் தனது உச்சகட்ட அதிகாரத்தை கொண்டு அந்த தீர்மானத்தை அமெரிக்கா ரத்து செய்கிறது. இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க மாற்று கொள்கை உலகளவில் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

No comments: