News Just In

4/24/2024 10:56:00 AM

ரூ.5,785 கோடி சொத்து மதிப்பு - ஆந்திராவின் பணக்கார வேட்பாளர்!




குண்டூர்: ஆந்திராவில் குண்டூர் மக்களவைத் தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளரான டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் தனக்கு மொத்தம் ரூ.5,785.28 கோடி குடும்பச் சொத்துகள் இருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஒரு சேர நடைபெற இருக்கிறது. இரு தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் மே மாதம் 13-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (ஏப்ரல் 25) முடிவடைகிறது. இந்நிலையில், முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாண பிரமாண பத்திரத்தின்படி, குண்டூர் மக்களவைத் தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளரான டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் தனக்கு மொத்தம் ரூ.5,785.28 கோடி குடும்பச் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஆந்திர பிரதேசத்தில் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் பணக்கார வேட்பாளராக மாறியுள்ளார்.

அவரின் பிரமாண பத்திரத்தின்படி, அவரது பெயரில் ரூ. 2,448.72 கோடியும், அவரது மனைவிக்கு ரூ.2,343.78 கோடியும், பிள்ளைகளின் பெயரில் ரூ.1,000 கோடி அளவுக்கும் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தனது குடும்பத்துக்கு அமெரிக்காவின் ஜேபி மோர்கன் சேஸ் வங்கியில் ரூ.1,138 கோடி கடன் இருப்பதாகவும் பெம்மசானி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பெம்மசானி சந்திரசேகர் ஒரு மருத்துவர். அவர் 1999-ல் விஜயவாடாவின் என்டிஆர் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பையும், 2005-ல் பென்சில்வேனியாவின் டான்வில்லில் உள்ள கீசிங்கர் மருத்துவ மையத்தில் எம்டி முதுகலை படிப்பையும் முடித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: