News Just In

3/11/2024 02:43:00 PM

பறந்துகொண்டிருந்த விமானத்தின் இரு விமானிகளும் உறக்கம்: இந்தோனேஷியா விசாரணை!



பறந்துகொண்டிருந்த பயணிகள் விமானத்தின் விமானி அறையில் இரு விமானிகளும் உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் தொடர்பில் இந்தோனேஷிய அரசாங்கம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

சுலேவெசி நகரிலிருந்து ஜகர்த்தா நகரை நோக்கி 153 பேருடன் பறந்துகொண்டிருந்த Batik Air விமானமொன்றில் இரு விமானிகளும் 28 நிமிடங்கள் உறங்கினர் என இந்தோனேஷிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றிருந்ததாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

எயார்பஸ் ஏ 320 இரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் சிறிதுநேரம் வேறு திசையில் சென்றிருந்தபோதிலும் பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்தில் துணை விமானியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தான் உறங்கப்போவதாக தலைமை விமானி கூறியிருக்கிறார்

எனினும், துணை விமானியும் சிறிதுநேரத்தில் உறங்க ஆரம்பித்தார்.

துணைவிமானியின் மனைவி ஒரு மாதத்துக்கு முன் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த நிலையில், சம்பத்துக்கு முந்தைய இரவு, குழந்தைகளை பராமரித்ததால் துணை விமானி களைப்படைந்திருந்தார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

உறக்கத்திலிருந்து விழித்த விமானி, துணை விமானியும் உறங்கிவிட்டதையும் விமானம் சிறிதுதேரம் பாதைமாறி சென்றிருப்பதையும் உணர்ந்தார்.

அவ்விமானியை ஜகார்த்தா வான் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்புகொள்ள முயன்றபோதிலும், 28 நிமிட மௌனத்தின் பின்னரே தொடர்பு கிடைத்தது.

பின்னர் அவர் கட்டுப்பாட்டாளர்களுடன் தொடர்புகொண்ட அவர், விமானத்தை தரையிறக்கினார் என செய்தி வெளியாகியுள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் விமானியிடமும் துணை விமானியிடமும் நடத்தப்பட்ட இரத்த அழுத்த சோதனைகள், இதயத்துடிப்பு வேகம் ஆகியன சாதாரண அளவில் இருந்தன.

இரு விமானிகளும் முழுமையான அளவு நேரம் ஓய்வில் இருந்தபோதிலும், அவர்களின் ஓய்வு தரமானதாக இருந்ததாக என ஆராய்வதற்கு சோதனைகள் தவறிவிட்டன என விமானப் போக்குவரத்து நிபுணர் அல்வின் லீ கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விமான நிறுவனத்துகுக்கு இந்தோனேஷிய வான் போக்குவரத்துத் தறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments: