News Just In

3/25/2024 01:28:00 PM

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழ் பேசும் இளைஞர்கள் முன்னின்று செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது - உப வேந்தர் றமீஸ் அபூபக்கர்



(எஸ்.அஷ்ரப்கான்)
சமூக நல்லிணக்கத்தை, ஒற்றுமையை ஏற்படுத்த தமிழ் பேசும் இளைஞர்கள் முன்னின்று செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது
என்று உப வேந்தர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இதழியல்துறை மாணவர்களின் "சமூக நல்லிணக்க இப்தார்" இதழியல் மாணவனும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஆசிரியருமான எஸ். அஷ்ரப்கான் தலைமையில், சாய்ந்தமருதில் நேற்று (24) மாலை, இதழியல் மாணவன் முஹம்மட் சிறாஜ் இன் முழுப்பங்களிப்புடன் இடம்பெற்றது.

இங்கு விசேட விருந்தினர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட பிடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில் மற்றும் சிரேஷ்ட பேராசிரியரும் இதழியல் கற்கைத் துறையின் இணைப்பாளருமான ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் உட்பட அம்பாறை, மட்டக்களப்பு, கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்த இதழியல்துறை தமிழ் மாணவர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இங்கு விசேட விருந்தினர்களில் ஒருவராக கலந்து சிறப்பித்த உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,சமூகங்களிலே பல்வேறுபட்ட பிரச்சினைகள், சிக்கல்கள் மலிந்து காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்திலே இன நல்லிணக்கத்தின் ஊடாக இரு சமூகங்கள் மத்தியிலும் ஒற்றுமையை கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் பலர் செயல்பட்டாலும், இரு சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர்கள் முன் வந்து செயற்படுவது மகிழ்ச்சியை தருகின்றது.

பல சந்தர்ப்பங்களில் சமூக நல்லிணக்கம் என்பது வெறும் செயற்பாடுகளற்ற கூட்டங்கள் என்றும் அமைப்புக்கள் கூடி கலைவதுமாக இருப்பதையே நாம் அதிகமாக காண்கின்றோம். இவ்வாறு இருப்பதனால் நாம் பூரணமான ஒற்றுமையை அமைதியை எமது பிரதேசங்களில் காண முடியாதுள்ளது. என்றாலும் சில அமைப்புக்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருவது பாராட்டப்பட வேண்டியதே.

ஆனால் துடிப்புள்ள தமிழ் பேசும் இளைஞர்கள் முன் வந்து சமூகங்களை ஒன்றிணைக்கின்ற கருத்து முரண்பாடுகளற்ற முறையில் ஒற்றுமைப்படுத்துகின்ற முயற்சியில் இறங்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை இலங்கை திருநாட்டில் நாம் தீர்த்து வைக்க முடியுமாக இருக்கும்.

ஆன்மீக ரீதியிலும் பல்லின சமய அனுஸ்டானங்களை எல்லோரும் அறிகின்ற ஒரு சந்தர்ப்பத்தை இவ்வாறான இப்தார் நிகழ்வுகள் ஏற்படுத்தி இருக்கின்றது.

இவ்வாறான பணி எதிர்காலங்களில் தொடர்ந்தும் நடைபெற வேண்டும். பல்வேறு கோணங்களில் தமிழ் பேசும் சமூகங்களின் இளைஞர்கள் இதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதன் ஊடாகவே சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதோடு எதிர்கால சந்ததிகளுக்காக சிறந்த தேசத்தை நாம் உருவாக்கி கொடுக்க முடியும்.

எனவேதான், இந்த சமூக நல்லிணக்க இப்தாரை ஏற்பாடு செய்த இதழியல் மாணவர்களின் முயற்சியை நாம் பாராட்டுகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

No comments: