News Just In

2/22/2024 08:40:00 PM

Akbar, Sita: `ஏன் சர்ச்சைக்கு வித்திட வேண்டும்.. சிங்கங்களின் பெயரை மாற்றலாமே!' - நீதிமன்றம் அறிவுரை

``இது ஒரு பொதுநல அரசு, மதச்சார்பற்ற அரசு. ஏன் சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்?" - நீதிமன்றம் கேள்வி



மேற்கு வங்கத்தின் சிலிகுரி சஃபாரி பூங்காவில், இருக்கும் இரு சிங்கங்களுக்கு சீதா, அக்பர் எனப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, மாநில வனத்துறைக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், `மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்குப் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர் பெயரும், ராமாயணத்தின் ஒரு கதாபாத்திரமான சீதா பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார். இதனால், இந்துக்களின் மனதை வனத்துறை புண்படுத்திவிட்டது’ எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், வனத்துறை தரப்பு, `பிப்ரவரி 13-ம் தேதி பூங்காவுக்கு, திரிபுராவிலுள்ள செபஹிஜாலா விலங்கியல் பூங்காவிலிருந்து சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போதே அதற்கு அந்தப் பெயர்கள்தான் இருந்தது' என விளக்கமளித்தது.

இந்த நிலையில், விவகாரம் குறித்து விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா, ``சிங்கத்திற்கு இந்து தெய்வம், முஸ்லிம் தீர்க்கதரிசி, கிறிஸ்தவ கடவுள், சுதந்திரப் போராட்ட வீரர், நோபல் பரிசு பெற்றவரின் பெயர்தான் வைக்கவேண்டுமா... இப்படித்தான் வைப்பீர்களா? பொதுவாக நம் நாட்டு மக்களால் மதிக்கப்படுபவரின் பெயரை வைக்கவேண்டுமா?


இது ஒரு பொதுநல அரசு, மதச்சார்பற்ற அரசு. ஏன் சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? இந்த சர்ச்சையே தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். சீதா என்று மட்டுமல்ல, மிகவும் திறமையான, உன்னதமான, மதச்சார்பற்ற முகலாய பேரரசரான அக்பரின் பெயரை வைப்பதையும் நான் ஆதரிக்கவில்லை. எனவே, மாநில அரசு அதைத் தவிர்த்துவிட்டு, சிங்கங்களின் பெயர்களை மாற்றப் பரிசீலிக்கலாம்" என வாய்மொழி ஆலோசனை அளித்திருக்கிறார்

No comments: