News Just In

1/17/2024 10:56:00 AM

அக்கரைப்பற்று கல்விவலய அதிகாரிகள், அதிபர் ஆகியோருக்கு நினைவு முத்திரை வெளியீடு!




அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.எஸ்.அஹமட் கியாஸ், அக்கரைப்பற்று சங்கணிச்சீமை அல்-கமர் வித்தியாலய முன்னாள் அதிபர் எச்.தாலிப் ஆகியோரின் பணியைப் பாராட்டி தபால் திணைக்களத்தின் கீழியங்கும் முத்திரைப் பணியகத்தினால் ரூபா 25 பெறுமதியான நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் சிற்றி பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்களம் நிகழ்ச்சித் திட்டத்தில், அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அல்-கமர் வித்தியாலய மாணவி எம்.எம்.அல்மா ஷைனப் மற்றும் அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய மாணவன் ஏ.எச்.உமர் ஹாமித் ஆகியோர் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு, இந்தியா செல்வதற்கான புலமைப்பரிசிலுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இப்பணிக்கு அர்ப்பணிப்பான சேவை வழங்கிய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.எஸ்.அஹமட் கியாஸ், அக்கரைப்பற்று இசங்கணிச்சீமை அல்-கமர் வித்தியாலய முன்னாள் அதிபர் (ஓய்வு) எச்.தாலிப் ஆகியோருக்கே தபால் திணைக்களத்தினால் ரூபா 25 பெறுமதியான நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி மாணவர்களுக்கான பரிசளிப்புவிழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் றஹ்மத்துல்லாஹ் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அகமட் கியாஸ் ஆகியோருக்கான நினைவு முத்திரை கையளிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.




இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய பாடசாலை ஆசிரியை எம்.எஸ்.எப்.பஸ்லீனாவுக்கு கல்வி அதிகாரிகள், பாடசாலை சமூகத்தினர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

“அக்கரைப்பற்று கல்வி வலயம் கடந்த காலத்தில் தேசிய ரீதியில், மாகாண மட்டத்தில் பல வெற்றிகள், சாதனைகளைச் சந்தித்துள்ளது. இதற்கு நாங்கள் பேதங்களின்றி ஒரு குடும்பமாக, கூட்டுப் பொறுப்புடன் தொழிற்பட்டமையே பிரதான காரணமாகும். தற்பொழுது தேசியரீதியில் முதலாமிடம் என்ற உயர்ந்த இலக்குடன் நாங்கள் மாணவர்களுக்கான எதிர்காலப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு கிடைத்துள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க இவ்வெற்றி போன்று, எதிர்காலத்திலும் மாணவர்கள் சாதனைகளை நிலைநாட்டி, முத்திரை பதிப்பர். அதற்கான உதவி, ஒத்துழைப்பினை கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் வழங்கி வருகின்றனர்” என்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் கருத்துத் தெரிவித்தார்

No comments: