ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், சுதந்திரத்துக்கான மற்றும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் முடிவுக்கு வரவில்லை எனவும், மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் மாண்டுபோன மக்களின் ஈகைகள் அதற்கு வழிகாட்டும் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகா என 'தமிழ் ஒளி' இணையப்பக்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி தாம் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும், சிங்கள மக்களுக்கு எதிராக செயற்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான கருத்துக்கள் விதைக்கப்பட்டு சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் நாளான நேற்று திங்கட்கிழமை (27) 'தமிழ் ஒளி' எனும் இணையத்தளப்பக்கமொன்று இயங்க ஆரம்பித்ததுடன், அதில் நேற்று மாலை 5.20 மணிக்கு மாவீரர்தின நிகழ்வு எனும் பெயரில் நேரடி ஒளிபரப்பொன்று இடம்பெற்றது. அதில் இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா உரையாற்றுவார் எனக்கூறப்பட்டு, அவரது உரையும் ஒளிபரப்பப்பட்டது. கணினித்தொழில்நுட்பத்தின் ஊடாக வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடி என்பன பின்னணியாக அமைக்கப்பட்டிருந்ததுடன், அதன்முன் தோன்றிய துவாரகா என்று 'தமிழ் ஒளி'யினால் கூறப்படும் நபர் உரையாற்ரினார்
No comments: