அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், செய்த தவறு குறித்து அணித்தலைவர் ரோகித் சர்மா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அணியின் வெற்றி இரகசியத்தை குறிப்பிட்ட ரோகித் சர்மா, இந்திய அணியின் தோல்விக்கு “சாக்கு சொல்ல விரும்பவில்லை” எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இரண்டாம் துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வென்றது.
இரண்டாம் பாதியில் துடுப்பாட்டத்தில் இறங்கும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக மாறும் என கிரிக்கெட் ஆர்வலர்களால் கூறப்பட்டது
இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய போது எல்லைக்கோட்டுக்கு அப்பால் பந்துகளை விரட்டவே கடினமாக இருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி இரண்டாம் பாதியில் துடுப்பெடுத்தாடிய போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆடுகளத்தின் தன்மை மாறியதால் இந்திய பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனது. அதுவே போட்டியில் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பில் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், “போட்டி முடிவு எங்களுக்கு சாதகமாக வரவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம்.
ஆனால், எதுவும் சரியாக நடக்கவில்லை. இன்னும் 20 - 30 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கோஹ்லி, ராகுல் கூட்டணி ஆடிய போது 270 - 280 ஓட்டங்கள் வரை எடுப்போம் என நினைத்தேன்.
ஆனால், விக்கெட்டை வரிசையாக இழந்தோம். 240 ஓட்டங்கள் மட்டுமே வைத்துக் கொண்டு பந்து வீசும் போது நாங்கள் விரைவாக விக்கெட்களை வீழ்த்தி இருக்க வேண்டும்.
ஆனால், ஹெட் - லாபுஷேன் சிறப்பான இணைப்பாட்டமொன்றை அமைத்து ஆடினார்கள். எங்களை இந்தப் போட்டியில் இருந்தே வெளியேற்றி விட்டார்கள்.
மின் வெளிச்சத்தில் ஆடுகளம் சற்று மாறி விட்டதாக கருதுகிறேன். ஆனால், அதை ஒரு “சாக்காக” கூற விரும்பவில்லை.
நாங்கள் போதுமான ஓட்டங்கள் குவிக்கவில்லை” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
No comments: