News Just In

11/27/2023 05:55:00 PM

மட்டக்களப்பில் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் : அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உள்ளிட்ட 4 பேருக்கு பிணை ; இருவருக்கு பிடிவிறாந்து




மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையின்போது எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உள்ளிட்ட 4 பேரையும், இருவர் ஆள்பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் இன்று திங்கட்கிழமை (27) அனுமதியளித்ததோடு, நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காத 2 பேருக்கும் பிடிவிறாந்து உத்தரவிட்டு எதிர்வரும் 2024 மார்ச் 18ஆம் திகதி வழக்கை தவணையிட்டு ஒத்திவைத்தார்.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஜனாதிபதி, மட்டக்களப்பு சாந்தா புனித மிக்கேல் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வருட நிறைவு விழாவின் பிரதம அதிதியாக கலந்துகொள்ள விஜயம் மேற்கொண்டார்.

அன்றைய தினம் ஜனாதிபதியின் மட்டக்களப்பு வருகையை எதிர்த்து, தேரர் உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்களை தடுக்கும் வகையில் நீதிமன்ற கட்டளை ஒன்றை பொலிஸார் கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் வீதிகளை மறித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதித்தது.

அந்த நிபந்தனையை மீறி வீதியை மறித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால், போக்குவரத்து விதிமுறையின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி மிக்கேல் கல்லூரிக்கு வருகை தந்திருந்தபோது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையிலான மேய்ச்சல் தரை மயிலத்தமடு மாதவனை சட்ட விரோத குடியேற்றவாசிகள் கொண்ட குழுவினர் கல்லூரிக்குள் உட்புகுவதற்கு முயற்சித்தபோது, அவர்களை பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி, தடுத்து நிறுத்தி, நீதிமன்ற கட்டளையை தெரிவித்தனர்.

எனினும், அதனை மீறி வீதியை மறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நீதிமன்ற கட்டளையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரோடு சேர்த்து இரு தேரர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றில் ஆஜரான அம்பிட்டய தேரர் உள்ளிட்ட 4 பேரையும் இரு சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்ததுடன், பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறும், நீதிமன்றுக்கு சமுகமளிக்காத 2 பேருக்கு பிடியானை பிறப்பித்து, 2024 மார்ச் மாதம் 18ஆம் திகதி வழக்கினை நீதவான் பிற்போட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: