News Just In

10/25/2023 02:16:00 PM

ஐ.நா பொதுச் சபையின் அவசரக் கூட்டம் நாளை!


இஸ்ரேல் மற்றும் காசா மோதல் தொடர்பில் ஐ.நா பொதுச் சபை நாளை (26) அவசர கூட்டத்தை நடத்தவுள்ளது.

இந்த போர் தொடர்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற ஐ.நா பாதுகாப்புச் சபை தவறிய நிலையில், அரபு நாடுகள் சார்பில் ஜோர்தானுடன் ரஷ்யா, சிரியா, பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் கம்போடியா உட்பட நாடுகள் பொதுச் சபையை கூட்டும்படி அழைப்பு விடுத்தன.

இஸ்ரேல் – காசா போர் தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபை தொடர்ந்து பிளவுபட்டு காணப்படுகிறது. ஆரம்பத்தில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பிரேசில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு 15 இல் 12 அங்கத்துவ நாடுகள் ஆதரவு அளித்தபோதும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை கொண்டு நிராகரித்தது.

ஐ.நா பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தில் அதன் 193 அங்கத்துவ நாடுகளும் பங்கேற்க முடியும். காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த தயாராகி வரும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அரபு நாடுகள் முயன்று வருகின்றன.

கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து ஐ.நா பொதுச் சபை விசேட கூட்டம் நடைபெற்றது. எனினும் பலஸ்தீன விவகாரம் தொடர்பில் பொதுச் சபை அவசர கூட்டத்தை நடத்துவது கடந்த ஐந்து ஆண்டுகளில் இது முதல்முறையாகும்.






No comments: