News Just In

10/09/2023 07:54:00 AM

ATM இயந்திரத்தில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான பணம் திருட்டு!

புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்ற போது, மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் ATM இயந்திரத்திற்கு, மோட்டார் சைக்கிளில் மூவர் முகங்களை மறைத்து மிகவும் சாதாரணமாக வருகை தந்தமை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கமைய அங்கு வருகை தந்த கொள்ளையர்கள், ATM இயந்திரம் பழுது என்றும் அதனை திருத்தப்போவதாகவும் கூறி, எவ்விதமான பதற்றமுமின்றி, திறப்பு ஒன்றின் மூலம் ATM இயந்திரத்தின் பின் கதவைத் திறந்து பணம் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்குள்ளே சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனையடுத்து, இரகசிய இலக்கங்களை உட் செலுத்தி குறித்த ATM இயந்திரத்தை திறந்த கொள்ளையர்கள் அந்த இயந்திரத்தில் இருந்த சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துணிகரமான கொள்ளைச் சம்பவத்தில் ATM இயந்திரத்திரத்திற்கோ அல்லது பாதுகாப்பு அறையின் கதவுக்கோ எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ATM இயந்திரம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ளதுடன், பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்துகளின் போதே கொள்ளையர்கள் இந்த துணிகர சம்பவத்தை நடத்தியமை மக்களுக்கும், பொலிஸாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தனியார் வங்கியுடன் தொடர்புடைய ஒருசிலரின் உதவியுடன் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக மதுரங்குளி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் பொலிஸ் தடயவியல் பிரிவினரும், கை ரேகை பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: