News Just In

9/06/2023 12:39:00 PM

தற்கொலைகளை தடுப்பதற்கான ஆலோசனை வழங்கும் வழிகாட்டல் கருத்தரங்கு!



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமை புரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான தற்கொலைகளை தடுப்பதற்கான விடயங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பான கருத்தரங்கு மாவட்ட செயலகத்தில் (04.09.2023) இடம்பெற்றது.

மாவட்ட செயலக பிரதி கணக்காளர் எம்.ஏ பஷீர் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் அதனைத் தடுப்பதற்கான ஆலோசனை வழங்குவது தொடர்பிலும் எம்மால் உதவ முடியும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு 3224 தற்கொலைச் சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளன. இதில் அதிகமானவர்கள் ஆண்களாகவும், குடும்ப சுமை, போதைவஸ்த்து பாவனை, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், வறுமை, மன உளைச்சல், தோல்வி மனப்பான்மை போன்ற காரணிகளால் இத்தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் 1333 என்ற இலக்கத்திற்கு அழைத்து தற்கொலைகளைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என தைரியம் முகாமிடுதல் அர்ப்பணிப்பு சம்மேளனத்தின் (CCC பௌண்டேஷன்) நிறுவன திட்ட அதிகாரி காமிலா தெரிவித்தார்.

தற்கொலைகளைத் தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளைத் தமது நிறுவனம் மேற்கொள்வதாகவும், 1333 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு எந்த நேரத்திலும் அழைத்து அவ்வாறான நிலையில் உள்ளவர்களை தொடர்புகொண்டு உளவியல் ரீதியாக ஆலோசனைகளை பெற முடியும்.

அதற்காகத் தமது நிறுவன செயற்பாடுகளை பொது மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு உதவுமாறு திட்ட அதிகாரி பங்குபற்றுனர்களைக் கேட்டுக்கொண்டார்.

தைரியம் முகாமிடுதல் அர்ப்பணிப்பு சம்மேளனம் (CCC பவுண்டேஷன்) 2009 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எமது நிறுவனத்தினால் ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தற்கொலை முயற்சிகளை நிறுத்தி இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர் மனோகிதராஜ் ,சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வலய உதவியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர் .


No comments: