News Just In

7/19/2023 12:34:00 PM

மட்டக்களப்பிலிருந்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள்!

மட்டக்களப்பிலிருந்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் ; விசேட நடவடிக்கை



மட்டக்களப்பிலிருந்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் பஸ்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (18) விசேட சோதனையை முன்னெடுத்துள்ளனர்.

மட்டு மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் உயத்.என்.பி.லியனகேயின் ஆலோசனைக்கமைய மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சரத் சந்திரா தலைமையிலான போக்குவரத்து பொலிஸ் குழுவினர் செவ்வாய்க்கிழமை (18) இரவு மட்டக்களப்பு கொழும்பு வீதியிலுள்ள பிள்ளையாரடி பகுதி வீதியில் மட்டக்களப்பு மற்றும் எனைய பிரதேசங்களில் இருந்து கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து பஸ்வண்டிகளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

இரவு 8 மணிக்கு ஆரம்பித்த இந்த விசேட சோதனை நடவடிக்கை இரவு 11 மணிவரை முன்னெடுத்தனர். இதன் போது போக்குவரத்து அனுமதிபத்திரம், சாரதி அனுமதிபத்திரம் உட்பட போக்குவரத்து சேவைக்கான அனைத்து அனுமதி பத்திரங்களையும் சோதனையிட்டு பதிவேட்டில் பதிந்ததுடன் வீதி போக்குவரத்தை மீறி பிரயாணித்த பஸ்வண்டிகளை எச்சரித்து அனுப்பியதுடன் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய மோட்டர் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, கல்முனை, நிந்தவூர். களுவாஞ்சிக்குடி, கத்தான்குடி உட்பட பல பிரதேசங்களில் இருந்து போக்குவரத்து அனுமதிபத்திரமின்றி கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இரவு வேளைகளில் போக்குவரத்து சேவையில் சுமார் 11 பஸ்வண்டிகள் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்இந்த சட்டவிரோத போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்வண்டிகளை கண்டறிந்து அவைகளை கைப்பற்றி நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்காக இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கை தொடர்ந்து இரவு வேளைகளில் இடம்பெறும் என மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்


No comments: