News Just In

6/04/2023 02:25:00 PM

மனப்பாங்கு மாற்றத்தினூடாக இயற்கையைப் பேணிப்பாதுகாப்பதற்கு இளைஞர் யுவதிகளுக்கு விழிப்புணர்வு!





-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இயற்கையைப் பேணிப்பாதுகாப்பதனை நோக்காகக் கொண்டு இளைஞர் யுவதிகளிடையே மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தும் பரீட்சார்த்த தொடர் விழிப்புணர்வு செயற்பாடுகள் வெற்றியளித்திருப்பதாக அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் அலுவலர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.

சைல்ட் பண்ட் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்தத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் அமுலாக்கம் செய்யப்படுவதாக அனுலா மேலும் தெரிவித்தார்.

சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று 04.06.2023 இடம்பெற்ற “பசுமையான சூழலை உருவாக்குவோம் பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனையைத் தவிர்ப்போம்” எனும் நிகழ்வில் இளைஞர் யுவதிகள் தாங்காளாவே தங்களது பெற்றோர் சகிதம் முன்வந்து தமது வீட்டையும் வீட்டுச் சூழலையும் துப்புரவு செய்ததோடு பயன்தரும் மரங்களை நாட்டுவதிலும் ஈடுபட்டனர்.

சமூகப் பங்குபற்றுதல் ஊடாக நிலைமாற்றமும் வாய்ப்புக்களும் எனும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் பெற்றோரையும் பிள்ளைகளையும் உள்ளடக்கிய விதத்தில் பரீட்சார்த்த திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் சொறுவாமுனை, விளாவெட்டுவான், பருத்திச்சேனை, பாவற்கொடிச்சேனை, ஆயித்தியமலை போன்ற பிரதேசங்களிலிருந்து அனுசரணைக் குழந்தைகளாக 25 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு இத்திட்டத்தில் பங்குபற்றுகிறார்கள்.

இவர்களிடையே தாங்களாகவே இயற்கை வளத்தைப் பேணிப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் கிராமங்கிளிலுள்ள சமூகத் தலைவர்களுக்கும் தங்களது வீட்டையும் வீட்டுச் சூழலையும் இயற்கை நேய செயற்பாடுகளின் மூலம் பராமரிப்பதற்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


No comments: