News Just In

6/13/2023 09:23:00 PM

மேலும் இரு நாட்களுக்கு கதிர்காம காட்டுப்பாதை திறப்பு

மேலும் இரு  நாட்களுக்கு காட்டுப்பாதை திறப்பு



12 ஆம் திகதி திறக்கப்பட்ட உகந்தை வழி கதிர்காமப் பாதயாத்திரை காட்டுப்பாதை எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் மூடப்படவிருந்த நிலையில் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொள்ளும் அடியவர்களும் பாத யாத்திரையை மேற்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காட்டுப்பாதையை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை திறந்து வைத்திருப்பதற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்யை தினம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவிக்கையில் - நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட செயலகத்திலே கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து சில விடயங்கள் சம்மந்தமாகப் பேசியிருந்தோம்.

அதில் முக்கியமாக கதிர்காம பாத யாத்திரை உகந்தை முருகன் ஆலயத்தில் இருந்து காட்டுவழிப்பாதை நேற்றைய தினம் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம்.

எங்களுடன் இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட அரச அதிபர், லாகுகல பிரதேச செயலாளர், கிழக்கு மாகண பிரதம செயலாளர், கிழக்கு மாகண உள்ளூராட்சி ஆணையாளர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோத்தர்கள், உகந்தை முருகன் ஆலய தலைவர் உள்ளிட்ட இவ்விடயத்துடன் தொடர்பு பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாத்திரிகர்களின் நன்மை கருதி, அவர்களுக்கு சாதகமாக இங்கு ஆளுநரின் தலைமையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

உகந்தையில் இருந்து கதிர்காமம் வரையான காட்டுப்பாதை சுமார் 56 மைல்கள் இருக்கும். இதனூடாக யாத்திரிகர்கள் செல்லும் போது பல அசௌகரிகங்களை எதிர்நோக்குகின்றார்கள்.

அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு தொடர்ச்சியாக குடிநீர் வழங்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும், நான்கு மைல்களுக்கு இடையிடையே தற்காலிக மலசல கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு இரவுகளிலும் தங்குமிடங்களுக்கு அருகே பெண்கள் உடை மாற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட வேண்டும். போன்ற முடிவுகள் இங்கே எடுக்கப்பட்டன. அந்த முடிவுகள் இந்தப் பாதையாத்திரையுடன் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு மேலாக மட்டக்களப்பில் மிகப் பிரபல்யமான களுதாவளை பிள்ளையார் கோவில் உள்ளிட்ட சில கோவில்களின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. பாத யாத்திரிகர்களுக்காக 12 ஆம் திகதி திறக்கப்பட்ட காட்டுப் பாதை எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் மூடுவதாக ஏற்கனவே முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் மேற்குறிப்பிட்ட மட்டக்களப்பின் ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தின் பின்னர் யாத்திரை செல்ல விரும்பும் அடியவர்களுக்கு இவ்விடயம் சாத்தியமற்றதாகக் கருதி திறக்கப்பட்ட காட்டுப்பாதையை மேலும் இரண்டு நாட்கள் நீடித்து எதிர்வரும் 27 ஆம் திகதி மூடுமாறு இதன்போது என்னால் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டது.

அந்த விடயத்தை முறையாகப் பரிசீலித்து அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. எனவே மேற்குறிப்பிட்ட ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொள்ளும் அடியவர்கள் கூட கதிர்காமம் பாதயாத்திரையை முன்னெடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் பண்ணப்பட்டிருக்கின்றது.

இவ்வேளையில் இக்காட்டுவழிப்பாதை திறந்திருக்கும் ஒவ்வொரு நாட்களிலும் தங்களுக்கு சுமார் ஒன்றில் இருந்து ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவாகுவதாக லாகுகல பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

அதில் ஒரு பங்கை நாங்கள் பொறுப்பெடுத்து அப்பாதையை மூடும் நாட்களை இரண்டு நாட்கள் பிற்போட்டுள்ளோம்.

அரச அதிகாரிகள் தங்களின் வேலை நிமித்தம் காரணமாக இந்த விடயத்தில் பின் நோக்கிய நேரத்திலே ஆளுநர் அவர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கி கட்டாயம் 27 ஆம் திகதி வரை காட்டுப் பாதை திறந்திருக்க வேண்டும், என்ற உத்தரவைப் பிறப்பித்தார். எனவே பாதயாத்திரை செல்லும் அடியவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை காட்டுப்பாதையூடாக யாத்திரையைத் தொடரலாம் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன், என்று தெரிவித்தார்

No comments: