News Just In

6/08/2023 10:17:00 AM

கஜேந்திரகுமாரின் கைது : பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் விசனம்!





பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதியையும் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் கோருகின்ற தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகளுக்குக்கூடப் பாதுகாப்பு இல்லை என்பதையே இக்கைது உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டனத்தையும், விசனத்தையும் வெளிப்படுத்தி தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவுகளிலேயே பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

கெரெத் தோமஸ்

இச்சம்பவம் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றைச் செய்துள்ள பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரும், சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிழல் அமைச்சருமான கெரெத் தோமஸ், 'கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டமையானது தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது. அவரின் விடுதலை குறித்து பிரிட்டன் வெளிவிவகார செயலாளர் ஜேம்ஸ் க்ளெவேர்லி உடனடியாக வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கின்றேன். ஜனநாயகமுறையில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ச்சமூகத்தின் பிரதிநிதிகள், தாம் சிறைப்படுத்தப்படுவோம் அல்லது அதனைவிடவும் மோசமாக நடத்தப்படுவோம் என்ற அச்சமின்றித் தமது மக்களுக்காகப் பேசுகின்ற சுதந்திரத்தைக் கொண்டிருக்கவேண்டும்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சியோபைன் மெக்டொனாக்

'இனப்படுகொலை மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை வலியுறுத்துகின்ற, இனப்பிரச்சினைக்கான தீர்வைக்கோருகின்ற தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகளுக்குக்கூடப் பாதுகாப்பு இல்லை என்பதை நினைவுறுத்தும் வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது அமைந்துள்ளது' என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் தெரிவித்துள்ளார்.

எலியற் கொல்பேர்ன்

பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும், தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழுவின் தலைவர் என்ற அடிப்படையிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதை கடுமையாகக் கண்டித்திருக்கும் எலியற் கொல்பேர்ன், பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக்கின் கருத்தை மீளவலியுறுத்திக் கூறியுள்ளார்.


No comments: