News Just In

5/09/2023 07:51:00 AM

மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவியின் தாய் வெளியிட்ட தகவல்!

களுத்துறையில் ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவியின்  மரணம் திட்டமிடப்பட்டுள்ளதாக உயிரிழந்த மாணவியின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த உயிரிழந்த சிறுமியின் தாயார், எனது மகளின் தோழி பணத்திற்காக எனது மகளை ஒருவரிடம் விற்றுள்ளார். எனது மகளுக்கு எந்த பாவியோடும் காதல் இல்லை. ஒரு தாயாக இதனை பொறுப்புடன் சொல்கின்றேன்.

எனது பிள்ளைக்கு அவ்வாறான தேவை இல்லை. என் மகள் படிப்பதில் சிறந்தவள். ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறுபவள்.சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது ஏ சித்திகளை பெறுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.

சம்பவத்தன்று மதியம் மகளின் நண்பி அவளை வெசாக் பார்வையிட செல்வதற்காக அழைத்தாள். எனக்கு அது பிடிக்கவில்லை.நான் மறுத்தேன். இருப்பினும் அந்த பெண் தனியாக செல்வதினால் இன்று மாத்திரம் இனி வரமாட்டேன். துணைக்கு அனுப்புமாறு கெஞ்சினாள்.பெண் பிள்ளை என்பதனால் துணைக்கு அனுப்பினேன்.

இருப்பினும், அவள் பொய் கூறிவிட்டு தனது காதலனை சந்திக்க தேவாலயத்திற்கு செல்வதாக கூறி எனது பிள்ளையையும் அழைத்துச்சென்று பலிகொடுத்துள்ளார்.
மகள் நேரமாகி வீட்டிற்கு வராத காரணத்தினால் அழைப்பினை எடுத்தேன். கோவிலில் இருப்பதாக சொன்னாள். மீண்டும் அழைத்தபோது தொலைப்பேசி வேலை செய்யவில்லை.இது ஒரு பெரிய திட்டம்.

என் பிள்ளைக்கு 16 வயது. அவள் 29 வயது இளைஞனுடன் அறையொன்றில் மது அருந்தியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், எனது மகள் மது அருந்தும் பெண் அல்ல. இப்போது நான் இழப்பதற்கு எதுவும் இல்லை. மகள் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளால் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளோம்.

எங்களுக்கு நிறைய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதற்கு நீதி வழங்குமாறு ஊடகங்களை கேட்டுக்கொள்கிறோம். எனது மகளுக்கு நேர்ந்த குற்றம் இந்த நாட்டில் இன்னொரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளில் வெளியான தகவல்
இதற்கமைய, பொலிஸாரின் விசாரணைகளின் போது, ​​குறித்த மாணவி மே மாதம் (06.05.2023) ஆம் திகதி மாலை 6.20 மணியளவில் களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு மற்றுமொரு இளைஞன் மற்றும் தம்பதியருடன் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவி விடுதியில் அறைகளை முன்பதிவு செய்ய வயது தடையாக இருந்ததால் தனது தோழியின் அடையாள அட்டையை காண்பித்து பதிவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும் ஒரே அறையிலிருந்து நால்வரும் மது அருந்தியதை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்ததாக கூறப்படுகின்றது.

இதன்போது இளம் பெண் ஒருவரும், மற்றைய இளைஞனும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளதுடன், ​​​​20 நிமிடங்களுக்கு பின் மற்றைய இளைஞனும் பதற்றத்துடன் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான சந்தேகநபர் தப்பியோட்டம்
அதனையடுத்து, சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் விடுதியில் இருந்து வெளியேறிய மற்றைய தம்பதியினரை தொடர்பு கொண்டு, மாணவி விடுதியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகவும், புகையிரத கடவையிலிருந்து சடலத்தை மறைத்து விடுமாறும் அனைவரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்று கூறியதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அதன்படி, சடலம் விழுந்த இடத்துக்குச் சென்ற தம்பதியினர், சடலத்தை புகையிரத தண்டவாளத்திலிருந்து ஓரமாக அகற்றிவிட்டு களுத்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி கீழே விழுந்ததையடுத்து, சந்தேகநபர் காரில் ஹோட்டலில் இருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம நுழைவாயிலுக்குச் சென்று காரை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது நண்பருக்கு அழைப்பினை ஏற்படுத்தி கார் இருக்கும் இடத்தை தெரிவித்து அதனை எடுக்குமாறு கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, களுத்துறை பலதொட்ட பிரதேசத்தில் காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன் அதனை கொண்டு வந்த சந்தேகநபரின் நண்பரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் புகையிரத தண்டவாள பகுதியில் பெண்ணொருவர் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டதில் குறித்த மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் மாணவியுடன் விடுதிக்கு சென்ற மற்றைய தம்பதியினர் மற்றும் கார் சாரதி ஆகியோர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: