News Just In

4/10/2023 07:42:00 AM

மாணவர்களிற்கு கற்றல்உபகரணங்கள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வருடாந்தம் சுவாமி விவேகானந்தரின் ஜனன தினத்தினை முன்னிட்டு பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு முதல் தவணை தொடங்கும் போது அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையிலே இந்த வருடம் பாடசாலை முதல் தவனை ஆரம்பம் தற்போது நடைபெறுகின்றதனையிட்டு இந்த வருடமும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது. போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனைப்பற்று, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகங்களிற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக அறக்கட்டளையின் உறவுகளான புலம்பெயர் உறவுகள் மூலம் கிடைக்கப்பட்ட நிதிப்பங்களிப்பினை கருத்தில் கொண்டு தற்போது 150 க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிற்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களிற்கு தொகுதி தொகுதியாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு அதன் இறுதி நிகழ்வாக ஒரு தொகுதி மாணவர்களிற்கு ஞாயிற்றுக்கிழமை (09.04.2023) மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சார்பாக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.திவாகரன் அவர்களும் மட்/கிரான்குளம் விநாயகர் வித்தியாலய அதிபர் மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர், சேவையாளர்கள் கலந்துகொண்டனர்.

உலகம் பூராகவும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தாலும் அறக்கட்டளையின் உறவுகள் பலர் முன்வந்து இந்த உதவியினை செய்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கதும், தற்போதைய பொருளாதார சுமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்ப மாணவர்களிற்கு இந்த உதவி காலத்தின் தேவை எனவும், இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அறக்கட்டளையின் நன்கொடை உறவுகள், மற்றும் பாடாசலை சமூகம், அரச நிறுவனங்களின் தலைவர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

.எச்.ஹுஸைன் 

No comments: