News Just In

4/20/2023 06:07:00 PM

தொடர்ந்தும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது ; இரா.சாணக்கியன்!

அரசாங்கத்திற்குப் பணம் சேர்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளில் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் ஈடுபடக் கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

மண்முனைபற்று தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்றைய தினம் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுத் தருவதற்கே செயற்படுத்தப்பட வேண்டும். மாறாக அவர்களுக்கு அந்தத் திட்டங்கள் பாதகமாக அமையக் கூடாது என்பதுடன் அரசியல்வாதிகள் அதற்குத் துணைபோகக் கூடாது.

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்திக்காகக் கொண்டுவரப்படும் திட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்குமாறே அமையவேண்டும். மக்களைச்சுரண்டி இராபம் உழைக்கும் திட்டங்கள் எமக்குத் தேவையில்லை. எனவே அரசாங்கத்திற்கு இலாபம் உழைக்கும் திட்டங்களை அரசியல்வாதிகள் ஊக்கப்படுத்தக்கூடாது.

அதேவேளை அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபம் கருதியும் குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது.

இதற்குப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் எனது எதிர்ப்புக்களைத் தொடர்ந்தும் வெளியிடுவேன்.

உதாரணமாக தென்எருவில் பற்று பிரதேசத்தில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வந்த படகுப்பாதைக்கு பணம் அறவிடப்படவில்லை. ஆனால் தற்போது திடீரென மக்களிடம் 50 ரூபா பணம் அறவிடப்படுகின்றது.

நாம் பணம் அறவிட வேண்டாம் எனக் கூறவில்லை. தற்போது காணப்படுகின்ற நெருக்கடி நிலைமைகின் மத்தியில் மக்களிடம் பணம் அறவிடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் பணம் அறவிட வேண்டாம் எனக் கூறவில்லை. ஆனால் புதிய படகுப் பாதையை அமைத்த பின்னர் பணம் அறவிடுவதில் எந்தப் பிரச்சினையும் எமக்கு இல்லை.

தற்போதுள்ள அந்தப் படகுப் பாதையில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. பல வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக இந்த விடயத்தில் பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிகமாக பாடசாலை மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வோர் ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதுவரைகாலமும் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த படகுப்பாதை சேவைக்கு ஏன் தற்போது பணம் அறவிடப்படுகின்றது.

ஒரு சில அரசியல்வாதிகள் தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கத்திற்கு இலாபமுழைத்துக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும்.

எனவே தற்காலிகமாகவேனும் இந்தப் படகுப்பாதை விடயத்தில் பணம் அறவிடுவதை நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது.

இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் மற்றும் உரிய அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறக்கூடாதென்பதில் கவனமாக இருக்கவும் வேண்டும் என்பதுடன் குறித்த விடயத்தில் மட்டுமல்ல அனைத்து திட்டங்களிலும் ஊழல் மோசடிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஒரு திட்டம் மக்களுக்காகக் கொண்டுவரப்படுகின்றபோது அது மக்களது நலன்சார்ந்ததாக அமைய வேண்டும்.

இந்தப் பணம் வசூலிக்கும் முறை மூலம் இந்தப் பாதையூடாக பயணத்தினை மேற்கொள்ளும் மக்களே அதிக சிரமங்களை எதிர்கொள்வார்கள்.

பொறுப்புவாய்ந்த அமைச்சர் மற்றும் அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற வகையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலையிட்டு இந்த விடயத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆனால் இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தில் எந்த முடிவுகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே உடனடியாக இந்த பணம் அறவிடும் செயற்பாடுகளை நிறுத்தி அதற்கான மாற்று ஏற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்.

வெறுமனே மக்கள் பணத்தினை வீணடிக்கும் அரசியல்வாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

மக்களைப் பாதித்து அவர்களிடம் வசூலிக்கும் பணத்தை அரசாங்கத்திற்கு அனுப்பி நல்ல பெயர் எடுப்பதற்கு எவரும் முயற்சிக்கக்கூடாது. அதற்கு நாம் அனுமதிக்கப்போவதுமில்லை.

இந்த விடயத்தில் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் பிரதேச செயலாளர் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். அத்துடன் இந்தப் பணம் வசூலிக்கும் நடைமுறையினை முன்னெடுக்க முடியாதென்பதை உரிய தரப்பினருக்கும் எடுத்துக்கூற வேண்டும்.

தொடர்ந்தும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என்பதில் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


No comments: