News Just In

4/21/2023 11:49:00 AM

புதிய சட்டத்தை எதிர்க்குமாறு சர்வதேசத்திற்கு அழைப்பு சட்டத்தரணிகள் புத்திஜீவிகள் செயற்பாட்டாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் இணைந்து வேண்டு வேண்டுகோள்


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை சட்டமாக்குவதற்கு முன்னரே கடுமையாக எதிர்த்து அதனைத் தடை செய்யுமாறு சர்வதேசத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் இணைந்து மனுத் தயாரித்து அதில் கையொப்பமிட்டு இலங்கையிலுள்ள சர்வதேச நாடுகளின் இராஜதந்திரப் பணியகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சட்டத்தரணிகளான சுரேன் டி பெரேரா, ஏர்மிசா டேகல், சுவஸ்திகா அருள்லிங்கம், சப்ரா ஜஹீத், கொட்பிரி யோகராசா செயற்பாட்டாளர்களான மரிசா த சில்வா, சந்துன் துடுகல, ருக்கி பெர்னாண்டோ, பி. கௌதமன் ஊடவியலாளர்களான ருவன் லக்நாத் ஜயக்கொடி, திசராணி குணசேகர உள்ளிட்ட இன்னும் பலர் இணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அவர்களால் தயாரிக்கப்பட்டு கொழும்பிலுள்ள இராஜதந்திரப் பணியகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கும் கோரிக்கையில் இலங்கையர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

கீழே ஒப்பமிட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அமைப்புக்களான நாங்களும் தனிநபர்களும் உங்களின் தகைமிக்க செல்வாக்கினைப் பயன்படுத்தியும் தற்போதைய இலங்கை அரசாங்கத்துடன் நீங்கள் கொண்டுள்ள இராஜதந்திர, அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைப் பயன்படுத்தியும் அனைத்து இலங்கையர்களுக்கான மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியினையும் ஜனநாயகத்தினையும் மேம்படுத்திப் பாதுகாக்கும் முதன்மை நிலைப்பாட்டினை நீங்கள் முன்னெடுக்க வேண்டுமென நாம் உங்களை வேண்டுகின்றோம்.

2023 மார்ச் 17 மற்றும் 2023 மார்ச் 22 ஆகிய இரு தினங்களில் உத்தியோகபூர்வ அரசாங்க வர்த்தமானியில் (ATA) வெளியிடப்பட்டது.

இது 2023 ஏப்ரல் பிற்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என்பதற்கான மற்றும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டால் அதன் பின்னர் சட்டமாக இயற்றப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

கொடிய சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை (PTA) பதிலீடு செய்யும் நோக்கத்திற்காகக் கொண்டுவரப்படவுள்ள (ATA) இலங்கையில் ஜனநாயகத்திற்கு அச்சட்டத்தினை விட மிகப் பாரதூரமான அச்சுறுத்தலாகும் என்பதை நாம் திட்டவட்டமாகக் குறிப்பிட விரும்புகின்றோம்.

அட்டூழியமிக்க இந்த உத்தேச சட்டத்தினை வாபஸ் பெற்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை உடனடியாக நீக்குமாறு நாம் அரசாங்கத்தினைக் கோருகின்றோம். இந்த முயற்சியில் நாம் உங்களின் உதவியினைக் கோரி நிற்கின்றோம்.

யுவுயு இன் கொடூரமான அம்சங்கள் (ATA) இல் ‘பயங்கரவாதம்’ என்பதன் வரைவிலக்கணம் சர்வதேச வழிகாட்டல்களுக்கு இயைபுறாததாக இருப்பதுடன் சாதாரணக் குற்றச்செயல்கள் மீது பரந்த உள்ளடக்கத்தினைக் கொண்டுள்ளது (வாசகங்கள் 3, 8, 9, 10,11, 12 மற்றும் 16). (ATA) பின்வருவனவற்றை வலுவூட்டுகின்றது:

● நீதிபதி ஒருவரின் அர்த்தபுஷ்டிமிக்க மேற்பார்வையினைக் கொண்டிராது ஒரு நபரை எந்த ஒரு பிரதிப் பொலிஸ்மா அதிபரும் தடுத்துவைத்தல் (வாசகம் 31).

● எந்த ஒரு சிரேஷ்ட பொலிஸ் சுப்பரிண்டண்டனும் நீதிமன்றத்தில் இருந்து ஊரடங்கினை ஒத்த உத்தரவுகளைப் பெறல் (வாசகம் 61).

● அமைப்புக்களை ஜனாதிபதி தடை செய்தல் (வாசகம் 82) நபர்களைப் பல்வேறு வழிகளில் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டுக் கட்டளைகளுக்காக விண்ணப்பித்தல் (வாசகம் 83) 24 மணித்தியாலக் காலப்பகுதிக்காக ஊரடங்கினைப் பிறப்பித்தல். (வாசகம் 85) பொலிஸ் மற்றும் இராணுவம் தொடர்பாக ‘ஒழுங்குவிதிகள்’ மற்றும் ‘பணிப்புரைகள்’ வடிவில் சட்டங்களை உண்மையில் ஆக்குதல் (வாசகங்கள், 98, 99), உள்ளிட்ட இன்னும் பல உள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் கூர்மதியற்ற நோக்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை விட மிகப் பாரிய அளவில் தனது பிரசைகளின் மனித உரிமைகளை மீறும் ஆற்றல்கொண்ட ஒரு சட்டத்தினை இலங்கை அரசாங்கம் கூர்மதியின்றி முன்மொழிந்திருக்கின்றது.

உத்தேச பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமானது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளைத் தக்கவைத்துள்ளதுடன் அதனை மேம்படுத்தவும் செய்கின்றது. இது ஜனநாயகத்தில் குடிமக்களின் முனைப்பான பங்கேற்பிற்கான தளத்தினைச் சுருக்கும், சமுதாயங்களை அரசின் தீவிரமான கண்காணிப்புக்கு உட்படுத்தும், அரசினை இராணுவமயமாக்கும், இதனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட சேதத்தினைத் தீவிரப்படுத்துகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளின் வரலாற்றுக்கு இலங்கை பதில் சொல்லியே ஆகவேண்டும் எண்ணற்ற மனித உரிமைகள் மீறல்களின் மூலமாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் இருந்து வருகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல தமிழர்கள், குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்படும் முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 16 வருடங்கள் வரையில் தடுத்துவைப்பில் செலவிட்டுள்ளனர்.

2019 முதல், பல முஸ்லிம்களும் இவ்வாறே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அனைத்து இனங்களையும் சேர்ந்த சட்டத்தரணிகளையும் சமயத் தலைவர்களையும் ஊடகவியலாளர்களையும் மாணவச் செயற்பாட்டாளர்களையும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் அநியாயமாகத் தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள பலரும் குரூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும் என்பதும் அது எவ்விதமான அதிவிசேட நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட எந்தச் சட்டவாக்கத்தினைக் கொண்டும் பதிலீடு செய்யப்படக் கூடாது என்பதும் எமது தெளிந்தாராய்ந்த மற்றும் தொடர்ச்சியான நிலைப்பாடாகும்.

உங்களின் விரைவான பதிற்செயற்பாட்டினை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்” என்று அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: