News Just In

3/09/2023 07:13:00 PM

மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை ; பெண் யுவதி சாப்பிட்ட கேக், வாழைப்பழத்தின் காசை கேட்கும் இளைஞர்!

பெண் பார்க்கச் சென்று, நிராகரிக்கப்பட்ட நபர் ஒருவர் , தான் பெண் பார்க்க சென்ற சமயங்களில் கொண்டு சென்ற கேக் மற்றும் வாழைப்பழத்திற்கான பணத்தை மணமகள் வீட்டினரிடமிருந்து பெற்றுத்தருமாறு கோரி பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மினுவாங்கொடை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 43 வயதுடைய பெண்ணின் பெற்றோர் மகளுக்கு பொருத்தமான மணமகனை எதிர்பார்ப்பதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்துள்ளனர்.

அந்த விளம்பரத்தை பார்த்த பாணந்துறையை சேர்ந்த நபர், தனது உறவினர்கள் சிலருடன் மினுவாங்கொடையிலுள்ள பெண் வீட்டிற்கு வந்துள்ளார்.
அவர்களிற்கு தேநீர் மற்றும் மதிய உணவை பெண் வீட்டினர் வழங்கியதாகவும், பாணந்துறை நபர் நான்கு தடவைகள் கேக் மற்றும் வாழைப்பழத்துடன் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அவருடன் சில தடவைகள் பேசிப்பழகிய பின்னர், அவரை பிடிக்கவில்லையென பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த பாணந்துறை நபர், பெண் பார்க்க சென்ற போது எடுத்துச் சென்ற கேக்குகள் மற்றும் வாழைப்பழங்களுக்காக செலவழித்த பணத்தைக் கோரி முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பாக பெண் தரப்பினரை பொலிஸார் அழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மணமகன் தரப்பினர் வீட்டுக்கு வந்த போது அவர்களை உபசரித்த விபரங்களை தெரிவித்த பெண் வீட்டினர், முறைப்பாட்டாளர் செலவிட்ட பணத்தை விட, தாம் அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாழைப்பழம், கேக் வாங்க செலவிட்ட பணத்தை பெற சிவில் வழக்கு தாக்கல் செய்ய மட்டுமே முடியுமென பொலிசார் தெரிவித்ததையடுத்து, மாப்பிள்ளை முறைப்பாட்டை வாபஸ் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

No comments: