News Just In

3/16/2023 03:08:00 PM

கிழக்கு மாகாணத்தில் எதிர்நோக்கும்; காணிப் பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்




ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மூவின மக்களும் கிழக்கு மாகாணத்தில் எதிர்நோக்கும்; காணிப் பிரச்சினைகள் தொடர்பாகவும் தேசிய காணிக் கொள்கைக்கான பரிந்துரை தொடர்பாகவும் கிழக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கலந்துரையாடல் ஒன்றை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தெரிவித்தார்.

அட்டப்பள்ளம் நிந்தவூரிலுள்ள தோம்புக் கண்டம் விடுதியில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் காணி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கான அழைப்புக்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின சமூகங்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதாக நிஹால் அஹமட் தெரிவித்தார்.

காணிகள் விடயத்தில் சகல சமூகத்தாரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்வின்றித் தொடரும் இந்தக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட வேண்டும். காணிப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்கும் தேசிய காணி கொள்கைக்கான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் இந்தக் கலந்துரையாடல் வாய்ப்பளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

காணியை இழந்த பல காணிச் சொந்தக்காரர்கள் தங்கள் காணிகளை அடைந்து கொள்ள முடியாமலேயே மரணித்து விட்ட துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது பிள்ளைகளுக்கு தங்களது காணிகள் எங்கே காணி இருக்கிறது என்றும் தெரியாது. காணிகள் விடயத்தில் சகல சமூகத்தாரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் நிஹால் அஹமட் ஆதங்கம் வெளியிட்டார்.

திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 4652 குடும்பங்களினது 14127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் உள்ளன.

இது விடயமாக கடந்த காலங்களில் பல முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்தும் இந்தக் காணிகளை மீட்டெடுப்பதற்கான முன் முயற்சிகளின் தொடராக அரசியல் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான நிஹால் அஹமட் தெரிவித்தார்.


No comments: