இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதன் பங்களிக்கட்சிகளுடன் இணைந்து தென் இலங்கைக் கட்சிகளின் துணை இல்லாமல் வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான சபைகளை கைப்பற்றும் என்றும் அதன்போது தமிழரசுக் கட்சி வகுத்த திட்டம் சரியானது எனும் உண்மை வெளிப்படும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த நாட்டு மக்களுக்கு மின்சாரம், எரிபொருள், மருந்துப் பொருட்கள் என அத்தியவசிய பொருட்களை தர முடியாத மொட்டுக் கட்சியினர் இம்முறை தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக கிழக்கில் படகு சின்னத்திலும், வடக்கில் வீணை சின்னத்திலும் போட்டியிடுவதாக பசில்ராஜபக்சவே அறிவித்துள்ளார்.
ஒரு ஏக்கரில் 20 மூடைகள் விளைந்தால் ஓர் மில்லியனர் ஆகலாம் என கடந்த வருடம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இந்நாட்டில் குடிமகன் ஒருவருக்கான கடன் தொகை ஒரு மில்லியனாக அதிகரித்துள்ளது. அதாவது மறை கணியமாக அவரது கருத்துக்கு மாறாக இடம்பெற்றுள்ளது.
கிழக்கை பாதுகாப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள் மயிலத்தனமடு, மாதவனை, கெவிலியாமடு, நெடியகல் மலை என தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தார்கள், இறுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாகவே அவை பாதுகாக்கப்பட்டன.
நாங்கள் எந்தவொரு நிலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை அரவணைத்து செல்லவே முயல்கின்றோம், இம்முறை உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி அதன் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தென் இலங்கைக் கட்சிகளின் துணை ஏதும் இல்லாமல் வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான சபைகளை கைப்பற்றும். இந்த முடிவுகளிலிருந்து தமிழரசுக் கட்சி தனித்து கேட்க வேண்டும் என வகுத்த திட்டம் சரியானது எனும் உண்மை அனைவருக்கும் வெளிப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments: