News Just In

2/18/2023 05:58:00 PM

இலங்கையில் உக்கும் கழிவுகளிலிருந்து மின்சார உற்பத்தி!

இலங்கையில் முதன்முறையாக அரச நிறுவனமொன்று உக்கும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த செயற்திட்டத்தின் மூலமாக நாளாந்தம் நாட்டின் தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பிற்கு 35 கிலோ வொட் மின்சாரம் சேர்க்கப்படவுள்ளது.

இந்த செயற்பாட்டை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரின் தலைமையில் கடுவெலையிலுள்ள 'ரன்பலஸ்ஸ' கழிவு முகாமைத்துவ நிலையத்தில் நடைபெறவுள்ளது.

கடுவெல மாநகர சபையின் மேயர் புத்திக ஜயவிலாலின் எண்ணக்கருவின்படி ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டத்தில், சுமார் 10 டொன் உக்கும் குப்பைகளிலிருந்து உயிரியல் வாயு தயாரித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய பணியாகும்.

கடுவெலை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து தினமும் சுமார் 100 டொன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதிலிருந்து சுமார் 45 டொன் உக்கும் குப்பைகள் பிரிக்கப்படுகின்றன.

தற்போது நாங்கள் நடத்தும் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கழிவு முகாமைத்துவ செயல் முறைக்கு மேலதிகமாக, உக்கும் கழிவுகளிலிருந்து உயிர் வாயுவை தயாரித்து அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே எமது திட்டமாகும் என கடுவெலை மாநகர சபையின் மேயர் புத்திக ஜயவிலால் குறிப்பிட்டார்.

No comments: