மறு அறிவித்தல் வரும் வரை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்று (10) பிற்பகல் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளதுடன், தேர்தல் அதிகாரிகள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணியை முன்னெடுத்துள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதிர்கட்சி தலைவர் கருத்து தெரிவிக்கையில், இது மக்களின் ஜனநாயக உரிமைகளை முழுமையாக மீறுவதுடன் மக்களின் இறையாண்மைக்கு எதிரானது. இது மாளிகைச் சதிகளின் விளைவு.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடைமுறைகளைப் பேணுவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.
அமைச்சரவை எடுத்த தீர்மானம் அரசியலமைப்பை மீறும் சட்ட விரோதமான தீர்மானமாகும்.
மக்களின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை மீறும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எதிராக நாட்டு மக்களுடன் முன் நிற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்.
No comments: