News Just In

11/06/2022 07:08:00 AM

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் திருகோணமலை மாவட்டத்திற்கு நல்லிணக்க கள விஜயம்!!

மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் அனுசரனையுடன் இயங்கிவரும் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியம் திருகோணமலை மாவட்டத்திற்கு இரண்டு நாள் நல்லிணக்க கள விஜயம் ஒன்றினை கடந்த (03) திகதி மேற்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி ஏ.யேசுதாசன் அடிகளார் தலைமையில் குறித்த இரண்டு நாட்களைக் கொண்ட திருகோணமலை மாவட்டத்திற்கான களப்பயணம் அமைந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றுள்ள குறித்த பல்சமய குழுவினர் திருகோணமலை மாவட்ட பல்சமய ஒன்றியத்துடன் இரு பல்சமய ஒன்றிய செயற்பாடுகள் மற்றும் அனுபவப் பகிர்வுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய நோயல் இமானுவேல் ஆண்டகை, திருமலை மாவட்ட கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை டன்ஸ்டன் மற்றும் திருகோணமலை மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் தலைவரும் திருமலை மாவட்ட ஜம்மியத்து உலமா தலைவருமாகிய ஜனாப் இன்ஷாப் மௌழவி அவர்களும் கலந்து கொண்டு தமது ஆலோசனைகளையும் அனுபவப் பகிர்வுகளையும் பகிர்ந்ததுடன் இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த பல் சமய ஒன்றியமும் இணைந்து எதிர்காலத்தில் கிழக்கு மாகாண பல்சமய ஒன்றியமாக செயற்படுவது தொடர்பாகவும் இதன்போது ஆலோசனை முன்வைக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இதற்காக பத்து பேர் கொண்ட குழு ஒன்று அமைப்பது தொடர்பாகவும் தீர்மானங்கள் எட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட மரியாள் பேராலயத்தினை பார்வையிட்ட பல் சமய ஒன்றிய குழுவினர் மறுநாள் 04.11.2022 திகதி காலை முன்னால் திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரும், மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் ஸ்தாபகருமான பேரருட்திரு கலாநிதி ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றிணையும் மேற்கொண்டுள்ளனர்.

ஆயருடனான குறித்த கலந்துரையாடலின் போது 1986 ஆம் ஆண்டு ஆயர் அவர்களினால் பல்சமய தலைவர்களையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு பலசமயம் ஒன்றியம், யுத்த காலத்திலும் மக்களுக்காக சமூக நல்லிணக்கத்திற்காக பணியாற்றி பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சமாதானத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி பணியாற்றி வருகின்றமை தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இதன் போது வருகை தந்திருந்த மதத்தலைவர்கள் மற்றும் பல்சமய ஒன்றிய உறுப்பினர்களால் ஆயரின் கடந்த கால சிறந்த அர்ப்பணிப்புமிகு செயற்பாடுகள் தொடர்பான இனிமையான நினைவுகளை நினைவு கூர்ந்துர்ந்ததுடன், ஆயரின் உடல்நல ஆரோக்கியத்திற்கான பல் சமய பிரார்த்தனைகளும் இதன் போது நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் உள்ள பாடல் பெற்ற திருத்தலமாகிய பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினை தரிசித்த குழுவினரிற்கு அவ் ஆலயத்தின் பழமை மற்றும் அற்புதங்கள் தொடர்பாக சைவப்புரவலர் திருமதி சிவஞானசோதி அம்மையாரினால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கோகர்ன ஸ்ரீ போதி விகாரைக்கு சென்ற குழுவினர் குறித்த விகாரையின் விகாரதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததுடன் விகாரையினையும் பார்வையிற்றிருந்தனர்.

இறுதியாக கண்டி வீதியில் அமைந்துள்ள அல் ஹூலூர் ஜும்மா பள்ளிவாயலுக்குச் சென்ற பல் சமய ஒன்றிய குழுவினர் இஸ்லாமிய வழிபாட்டு முறைகளை கேட்டு அறிந்ததுடன் கொத்துவா பிரசங்கத்திலும் கலந்து கொண்டதோடு, குறித்த பள்ளிவாயல் நிர்வாகிகளினால் பல்சமய குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. இதன்போது திருகோணமலை மாவட்டத்திற்கான வருகை தொடர்பான நோக்கம் தொடர்பாக கருத்து பகிர்வினை மேற்கொண்டிருந்தனர்.

திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இணைப்புப் பாலமாக அமையவுள்ள பல்சமய ஒன்றிய செயற்பாடுகள் இக் கள விஜயத்தின் ஊடாக நிறைவேறும் என தாம் எதிர்பார்ப்பதாக இதன் போது களவிஜயத்தில் பங்கேற்றிருந்த மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள் இதன்போது தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஊடாக பல்வேறுபட்ட சமூக மற்றும் சமய தலைவர்களை வலுப்படுத்தும் செயலமர்வுகள் மேலும் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இவ்வாறான செயற்பாடுகளில் ஒன்றாகவே திருகோணமலை மாவட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் சமய தலைவர்கள் மற்றும் அதன் நிருவாகிகளையும் கரீத்தாஸ் எகெட் நிறுவனம் அழைத்துச் சென்று நல்லிணக்க கள விஜயத்தினை மேற்கொண்டுள்ளது. அதேவேளை கடந்த காலங்களிலும் இவ்வாறான கள விஜயங்களை ஏனைய மாவட்டங்களிற்கும் நல்லிணக்க அடிப்படையில் கரீத்தாஸ் எகெட் நிறுவனம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கள விஜயத்தில் மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குணர் அருட்பணி அழகுதுரை யேசுதாசன் அடிகளார், பல் சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள், திருகோணமலை மாவட்ட பல் சமய ஒன்றிய செயலாளர் எம்.ஏ.எம்.றிஸ்மி,
மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் அடிகளார், பல் சமய ஒன்றியத்தின் உபதலைவர்களான இயோசு சபைத்துறவி அருட்தந்தை ஜோன் ஜோசப்மேரி அடிகளார், ஹயாத்து மொகமட் சாஜஹான் மௌழவி ஆகியோரும் பல்சமய ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் களப் பணியாளர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் சமாதான செயற்திட்ட இணைப்பாளர் இக்னேசியஸ் கிறிஸ்டி மற்றும் திருகோணமலை மாவட்ட கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் சமாதான செயற்திட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.றிஸ்மி ஆகிய இருவரின் இணைப்பாக்கத்தில் குறித்த கள விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: