News Just In

11/29/2022 01:42:00 PM

முப்பது ஆண்டுகால யுத்தம் பரஸ்பர சமூகங்களை விரோதியாகப் பார்க்க வைத்தது. தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அதிகாரி என். பாஸ்தேவன்





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முப்பது ஆண்டு காலம்வரை இடம்பெற்ற யுத்தம் இலங்கையில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்களை பரஸ்பர உறவாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை இல்லாமல் செய்து ஒருவருக்கொருவரை விரோதியாகப் பார்க்க வைத்தது என இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அதிகாரி பாஸ்தேவன் என். பாஸ்தேவன் தெரிவித்தார்.

முரண்பாட்டு பன்முக நிலைமாற்றத்திற்கூடாக இளைஞர் அமைதி முகாம் எனும் தொனிப்பொருளிலான வதிவிடப் பயிற்சி நெறியில் வளவாளராகக் கலந்து கொண்டு அவர் அறிமுக உரையாற்றினார்.

மட்டக்களப்பு சர்வோதய வள நிலையத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்தும் பங்குபற்றிய தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களையும் சேர்ந்த இளையோருக்கான பயிற்சி நெறி செவ்வாய்க்கிழமை 29.11.2022 இடம்பெற்றது.

அங்கு நிகழ்வை ஆரம்பித்து வைத்து மேலும் அறிமுக உரையாற்றிய பாஸ்தேவன், கடந்த கால வடுக்களை மாற்ற வேண்டிய தேவை தற்போதைய இளையோர் சமூகத்திற்கு உண்டு. அதனால்தான் இத்தகைய பயிற்சி நெறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றோம். இது வொரு வழிகாட்டல் மாத்திரமே.

இன்றைய இளைஞர்களாகிய நீங்கள் நாளைய தலைவர்களாகுவதற்கு மிகக் குறுகிய காலம்தான் உள்ளது. அதனால் நீங்கள் எனது இனம், எனது மதம், எனது மொழி எனும் குறுகிய வட்டப் பாதையைக் கடக்க வேண்டும். அந்த இன மத மொழி வாதங்களைக் கைவிட வேண்டும். இல்லையேல் எமக்கிடையிலான முரண்பாடுகள் இன்னுமின்னும் அதிகரிக்கவே செய்யும்.

வயோதிபர்களின் சமாதானத்தை விட இளையோரின் சமாதானம்தான் முக்கியமானது. அதுதான் நாட்டில் நிரந்தர அமைதியையும் அபிவிருத்தியையும் கொண்டு வரக் கூடியது.

அடுத்தவரின் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் மத நம்பிக்கைக்கும் அவர்களது மொழிக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். கௌரவத்தைக் கொடுத்துத்தான் கௌரவத்தைப் பெறவேண்டும். இவ்வாறு மதிப்பளிக்கும் தன்மை குறையும்பொழுதுதான் முரண்பாடுகள் தோன்றும் இதன் பின்னர் அழிவுதான் மிஞ்சும்” என்றார்.

இப்பயிற்சி நெறிகளில் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ண, திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரெட்ண, திட்ட அலுவலர் ஜசானியா ஜயரத்ன, தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமத இணைப்பாளர் ஆர். மனோகரன் ஆகியோரும் வளவாளர்ளாக றேணுகா ரத்னாயக்க, சனம் டில்ஷான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


No comments: