News Just In

10/17/2022 11:47:00 AM

வங்கிகளில் கடன் பெற்ற அரச ஊழியர்களுக்கு ஏமாற்றம்!!


எப்.முபாரக்

அரச சேவை உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, வங்கிகளில் கடன்களைப் பெற்ற அரச ஊழியர்கள், மீண்டும் கட்டாய ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்டதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி இருப்பதாக அரச ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரச ஊழியரின் ஓய்வூதிய வயதில்லை 65 ஆக அதிகரிக்கப்பட்ட போது அதிகளவான உத்தியோகத்தர்கள் அவரகளது எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை ஏற்படுத்தி பிள்ளைகளின் கல்வி, வீடு, திருமணம் போன்ற இன்னோரன்ன வாழ்வாதாரப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வங்கிகளில் கடன்களை பெற்றுக் கொண்டனர்.

கடன் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் உத்தியோகத்தரின் சம்பள வருமானத்தினை உறுதிப்படுத்தி 65 வயதுக்குட்பட்ட காலம் வரைக்கும் சம்பளத்தில் இருந்து அறவீடுகள் செய்வதற்கு இணக்கம் தெரிவித்த பின்பு வங்கிகளினால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அக் கடன்களைச் செலுத்தும் காலப் பகுதிகளுக்கு காப்புறுதியும் செய்யப்பட்டு கடன்களைப் பெற்றிருக்கிறோம் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-
இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் முன்மொழிவுகளின் பிரகாரம் ஓய்வூதியம் பெறச் செய்யும் வயதை 65 வயதில் இருந்து 60 வயதாக அரசாங்கம் குறைத்துள்ளது.

இதன் காரணமாக கடன்களை மீள செலுத்துவதற்கு 65 வயது வரை தவணை அடிப்படையில் கடனைப் பெற்ற நாங்கள், 60 வயதில்
ஓய்வு பெற்று, குறித்த கடனை ஓய்வூதியத்திலிருந்து செலுத்துவதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் ஓய்வூதி வருமானம் முழுவதையும் கடனை செலுத்த வேண்டிய நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மேலும் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கடன் நிலுவையின் தொகையை மாதாந்தம் ஓய்வூதியத்தில் இருந்து செலுத்துவதற்கு புதிய கடன்களைப் பெற வேண்டி ஏற்படும்.

புதிய கடன்களைப் பெற்றுக் கொள்ளும் போது நடை முறையில் உள்ள வட்டி விகிதமும் கடன் அறவீட்டுக் காலங்களும்
நீடிக்கப்படும் போது, கடன் பெற்ற ஓர் அரச ஊழியர் தனது மரணம் வரைக்கும் பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து மீள முடியாத துன்பம் நிறைந்த தொடர் வாழ்க்கையையே சந்திக்க வேண்டி இருக்கின்றது.

இதன் காரணமாக இவ் வருடத்தில் ஓய்வு பெறப்போகும் அரச சேவையாளர்களுக்கு சலுகை அடிப்படையில் புதிய கடன்களை பெறுவதற்கும் வட்டி வீதத்தில் சலுகை அடிப்படையில் மாற்றங்களை அரசாங்கம் செய்து தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments: