News Just In

9/14/2022 01:22:00 PM

சமூக அபிவிருத்திக்கு சூழலை தூய்மையாக வைத்திருப்போம் திட்டத்தின் கீழ் வாகரையில் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான திண்மக் கழிவகற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!




- ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
சமூக அபிவிருத்திக்கு சூழலை தூய்மையாக வைத்திருப்போம் எனும் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் வாகரையில் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான திண்மக் கழிவகற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் திருகோணமலை – மட்டக்களப்பு நீண்ட நெடு வீதியில் பொதுமக்கள் ஒன்று கூடுமிடங்கள், பஸ் நிலையங்கள், சந்தை, அரச கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் திண்மக் கழிவுகளைச் சேகரிப்பதற்காக 21 கழிவு சேகரிப்புத் தொட்டிகள் வாகரைப் பிரதேச செயலகத்தில்; புதனன்று 14.09.2022 கையளிக்கப்பட்டுள்ளன.

கையளிப்பு நிகழ்வில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திலீப்குமார் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிங்கம் மயூரன் வாகரைப் பிரதேச செயலாளர் ஜி. அருணன், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ. சுதாகரன் உள்ளிட்டோரும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவன அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

வாகரை பிரதேரச செயலகம், கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை மற்றும்; சமூக மட்ட பிரதேச மக்களின் முழுமையான பங்கேற்புடன் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக திலீப்குமார் மேலும் தெரிவித்தார்.

உக்கும், உக்காத, கண்ணாடி, மற்றும் பிளாஸ்ரிக் என கழிவுகள் நான்கு பிரிவாக வகைப்படுத்தப்பட்டு சேகரிக்கப்படவுள்ளன. இதேவேளை மீள் சுழற்சிக்குட்படுத்தக் கூடிய ஒரு வகை பிளாஸ்ரிக் குடிபான போத்தல்களும் கொடுப்பனவு செய்து சேகரிக்கப்படவுள்ளதாக திலீப்குமார் தெரிவித்தார். நிலைபேறான சமூக அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.






No comments: