News Just In

9/14/2022 09:42:00 AM

பாலியல் துஸ்பிரயோகம் செய்து உண்மைகளை அப்பட்டமாக மூடிமறைத்த கல்முனை பௌத்த மதகுரு கைது : செப்டம்பர் 16 வரை விளக்கமறியல்




நூருல் ஹுதா உமர்

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த மத குருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரையொன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் (13) கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேக நபரான பௌத்த மத குருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்ட கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரையொன்றில் புதிதாக இணைந்த 3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) இறுதிப்பகுதியில் இளம் பிக்குகளின் பெற்றோரினால் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது வைத்தியசாலையிலுள்ள பிக்குகளுக்கான தனியான சிகிச்சைப்பிரிவிற்கு 3 இளம் பிக்குகளும் வைத்திய பரிசோதனைக்காக மாற்றப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 இளம் பிக்குகளும் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த துறவியினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகிதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து, குறித்த 3 இளம் பிக்குகளும் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கையூடாக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 இளம் பிக்குகளை கல்முனைப்பகுதி விஹாரையொன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவைக் கைது செய்ய பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருந்தது.

இந்த விடயங்கள் சகலதும் அப்பட்டமான பொய்யென்றும், குறித்த செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஊடகவியலாளரினால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் குறித்த தேரர் ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலையே இந்த கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments: