News Just In

8/08/2022 06:11:00 AM

இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள வேலை நிறுத்த போராட்டம்!

அரச பேருந்து சேவையின் கிளிநொச்சி சாலையினர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்றைய தினம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 6 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தே போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நான்கு வெவ்வேறு சம்பவங்கள் இன்றுடன் பதிவாகியுள்ளதாகவும், பொலிசார் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பட்சத்திலேயே தமது சேவையை முன்னெடுக்க முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தை அண்மித்த பகுதியில் 6 பேர் கொண்ட குழுவினர் பேருந்தினை மறித்து சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதால் அவர்கள் காயங்களிற்குள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளபோதிலும், ஏனைய மூவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதன் ஊடாகவே தமது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்காக இன்றைய தினம் கிளிநொச்சி பேருந்து சாலையினால் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து சேவையை இடைநிறுத்துவதாகவும், 6 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் தமது போராட்டத்தை கைவிடுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் இன்று காலை குறித்த பகிஸ்கரிப்பில் தாங்கள் ஈடுபடவுள்ளதாகவும், நீதி கிடைக்கவில்லை எனில் ஏனைய பேருந்து சாலையினரும் தமக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

No comments: