News Just In

8/05/2022 10:00:00 AM

நிம்மதியான வாழ்வுக்கு உரிமைகளை கேட்டு போராடியவர்களை கைது செய்வது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி கண்டனம்




நூருல் ஹுதா உமர்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட அரகல போராட்டக்காரர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்தக் கைதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் பழிவாங்கும் செயற்பாடாகவுமே அமைந்துள்ளது. இவ்வாறான அடக்குமுறைகளை ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு நாட்டில் தமது உரிமைகளை, தேவைகளை கேட்டும் மற்றும் போராடியும் பல தொழிற்சங்கள் கடந்த காலங்களில் பெற்றுள்ளது. அவ்வாறான ஒரு போராட்டத்தையே முன்னிறுத்தி காலிமுகத்திடல் போராட்டகாரர்களும், இலங்கை ஆசிரியர் சங்கத்தினரும் கடந்த ஓரிரு மாதங்களாக மேற்கொண்டிருந்தனர்.

அதிகார இரும்புக்கரங்களை கொண்டு அடக்குமுறைகளில் ஈடுபடுவதிலிருந்து விடுபடுவதன் ஊடாகவும் நாட்டு மக்களின் நம்பிக்கையுடன் கூடிய முன்னேற்றகர செயற்பாடுகளினூடாக நாட்டின் இன்றைய வீழ்ச்சி நிலையிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் எனவும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார் . ஜனநாயக நாடான எமது இலங்கை தேசத்தில் மனிதாபிமானத்தையும், உச்சகட்ட ஜனநாயக மரபுகளையும் சீராக பேணுவதன் மூலமே உதவ எண்ணம் கொண்டுள்ள சர்வதேச நாடுகளினதும், சர்வதேச அமைப்புக்களினதும் ஒத்துழைப்பையும் உதவிகளையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

இதே நேரத்தில் போராட்டத்தின் பாதையை மாற்றி பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, அரச காரியாலயங்கள், அரச நிறுவனங்களுக்குள் அத்துமீறி நுழைவது ஜனநாயக போராட்டங்களுக்கு அழகல்ல. குறிக்கோளின் வரம்புகளை மீறி போராட்டக்காரர்கள் செயற்படுவது இலங்கை தேசத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். ஜனநாயக வழியில் நாட்டின் நலனை முன்னிறுத்தி போராடுவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments: