News Just In

8/04/2022 12:02:00 PM

சாய்ந்தமருது ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாய நடவடிக்கை மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் !




நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதுடன் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கின் வழிகாட்டலுடன் வாகனங்களுக்கான QR குறியீட்டுடன் கூடிய எரிபொருள் விநியோகமும் முதல் தடவையாக பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை வாகனங்களின் இறுதி இலக்கங்களுக்கு அமைய கடந்த தினங்களாக எரிபொருளை பெற்றுக் கொள்ளாத பொதுமக்களுக்கும் இன்றைய தினம் எரிபொருள் வழங்கப்பட்டன. இதன் போது மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டரும் முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டரும் சொகுசு கார் வாகனங்களுக்கு 20 லீட்டரும் எரிபொருள் வழங்கப்பட்டது.

அத்துடன் கரப்பிணிகள், மத தலைவர்கள், பொலிஸார், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், நோய் பிணியாளர்கள், அவசர சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள், சுகாதாரத்துறையினர் உட்பட முன்களப்பணியாளர்களுக்கு சாய்ந்தமருது ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாகத்தின் விசேட நடைமுறைகளின் பிரகாரம் இடையிடையே முன்னுரிமை வழங்கப்பட்டு எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. முன்களப்பணியாளர்கள் பலருக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை இலகுவாக பெற நடவடிக்கை எடுத்த கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பர், ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.எம். தில்சாத் ஆகியோருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

பிரதேச மீனவர்களுக்கு போதியளவிலான எரிபொருளை பெற்றுக்கொடுக்க சாய்ந்தமருது ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனினும் இன்னும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் சரியாக பின்பற்றப் படாமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


No comments: