News Just In

8/03/2022 06:17:00 AM

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் சிங்கப்பூர் மந்திரி வெளியிட்ட தகவல்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷவுக்கு தனிச்சலுகைகள் எதுவும் வழங்கவில்லை. அவருக்கு சட்ட பாதுகாப்பும் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் மந்திரி கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எதிர்ப்பை தொடர்நது, கடந்த மாதம் 13-ம் திகதி மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார்.

அங்கு எதிர்ப்பு எழுந்ததால், மறுநாள் சிங்கப்பூருக்கு சென்றார். அன்றே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.

அவருக்கு 14 நாட்கள் தங்கி இருப்பதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டை சிங்கப்பூர் அரசு வழங்கியது. இந்த அனுமதி மேலும் 14 நாட்களுக்கு (ஓகஸ்டு 11-திகதி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி. ஜெரால்டு ஜியாம் கேட்ட கேள்விக்கு அந்நாட்டு வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது, பொதுவாக, பிற நாட்டு அரசுகளின் முன்னாள் தலைவர்களுக்கு சிங்கப்பூர் அரசு எவ்வித தனிச்சலுகைகளோ, சட்ட பாதுகாப்போ, விருந்தோம்பலோ அளிப்பது இல்லை. கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தனிச்சலுகைகளோ, சட்ட பாதுகாப்போ அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.

''அரசியல்வாதிகள் தஞ்சம் கோரும் இடமாக சிங்கப்பூர் மாறிவிடுமா?'' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட மந்திரி கே.சண்முகம் பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது, வெளிநாட்டினர் உரிய பயண ஆவணங்களுடன் வந்தால், சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயத்தில், தேசநலன் கருதி, வெளிநாட்டினரை அனுமதிக்க மறுப்பதற்கும் நமக்கு உரிமை உள்ளது.

ஒரு வெளிநாட்டுக்காரர், அவரது நாட்டில் தேடப்படுபவராக இருந்தால், அவரது அரசு வேண்டுகோள் விடுத்தால், அவரை பிடிக்க சட்டத்துக்கு உட்பட்டு சிங்கப்பூர் அரசு உதவும்.

ஒரு வெளிநாட்டுக்காரரின் முன்னாள், இ்ந்நாள் அந்தஸ்தை கருதி, அவருக்கான அச்சுறுத்தலை ஆய்வு செய்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

No comments: