News Just In

7/28/2022 08:19:00 PM

இலங்கைக்கு புதிய நிபந்தனை போட்ட IMF!

இலங்கைக்கு தாம் நிதி உதவி வழங்குவதற்கு முன்னர் இலங்கை அதன் கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.

நேற்று மாலை ட்விட்டர் ஸ்பேஸ் கலந்துரையாடலின் போது கேள்விகளுக்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ப்யர் ஒலிவியர் கொவ்ரிஞ்சாஸ் (Pierre-Olivier Gourinchas) , இலங்கையின் நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவலை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் இலங்கையில் கொடுப்பனவு சமநிலை நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்து போயுள்ளது. இதனால் அடிப்படைத் தேவைகள். மருந்துப் பொருட்கள் மற்றும் எரிசக்திக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தநிலையில் பொருளாதார நெருக்கடி இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சர்வதேச நாணய நிதியம் கவலை கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளது.

எனினும் சீனா உள்ளிட்ட கடனாளிகளுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் விரும்புவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் (Pierre-Olivier Gourinchas) இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments: