News Just In

7/28/2022 03:48:00 PM

அரசாங்கம் ஒதுக்கிய இடத்தில் போராட்டம் செய்ய நாங்கள் தயாரில்லை - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்



அரசாங்கம் ஒதுக்கி இருக்கும் விகாரமாதேவி பூங்காவில் போராட்டம் மேற்கொள்ள நாங்கள் தயாரில்லை. எங்களுக்கு தேவையான இடத்திலே நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம். யார் என்ன சொன்னாலும் நாட்டு மக்களுக்காக மேற்கொள்ளப்படும் போராட்டத்தை தொடர்ந்து காலிமுகத்திடலில் முன்னெடுத்துச்செல்வோம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

போராட்டம் மேற்கொள்ள கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இடம் ஒதுக்கித்தருவதாக அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் அதற்கு தயார் இல்லை. தற்போது நாங்கள் போராட்டம் மேற்கொள்ளும் இடம் பொது மக்களுக்கு எந்த இடையூறும் இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்டப அரசாங்கம் பதவி விலகும்வரை போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.

அத்துடன் போராட்டம் ஒன்றை எந்த இடத்தில் முன்னெடுக்க வேண்டும் என யாருக்கும் தெரிவிக்க முடியாது. அதனால் எமது தீர்மானத்தில் நாங்கள் மாறப்போவதில்லை. இந்த திருட்டு கும்பலை வீட்டுக்கு அனுப்பும்வரை நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.

நாட்டில் எரிபொருள் பிரச்சினை, எரிவாயு பிரச்சினை உட்பட நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல் அரசாங்கம் மக்களை அடக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எனவே அரசாங்கம் எமது போராட்டத்தை அடக்குவதற்கு பதிலாக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசாங்கம் தெரிவிக்கும் இடத்தில் போராட்டம் செய்ய நாங்கள் தயாரில்லை. எமது மக்கள் போராட்டம் காலிமுகத்திடல் கோட்டா கோ கமவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

No comments: