News Just In

7/31/2022 08:33:00 PM

இரவுநேரக் கடமையில் வைத்தியர்கள் இல்லை; நோயாளர்கள் அவதி!

கல்முனை பிராந்திய, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் இரவுநேரக் கடமை வைத்தியர்கள் வைத்திசாலையில் இல்லாமல் வீடுகளில் உறங்குவதாக நோயாளிகளும், பொதுமக்களும் விசனம் தெரிவிக்கின்றர்.

நேற்றிரவு (30) 11:50 மணியளவில் கண்ணில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளச் சென்றுள்ளனர். அங்கு, இரவுநேரக் கடமை வைத்தியர் வைத்தியசாலையில் இல்லாமல் தனது வீட்டில் உறங்குவதாக கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தரும், சுகாதார உதவியாளரும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை பெறவந்த நோயாளியை வேறு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் ஏதாவது அவசர தேவை ஏற்பட்டால் எனது அலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள் என்று கூறிவிட்டு குறித்த வைத்தியர் வீடு சென்றதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளுக்கு அவசரமாக சிகிச்சை வழங்க வேண்டும் என்பதற்காகவே அவசர சிகிச்சைப் பிரிவு உருவாக்கப்பட்டு அதற்கென வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களும் சுழற்சி முறையில் 24 மணிநேரக் கடமையில் அமர்த்தப்பட்டு அவை இயங்கி வருகின்றன. வைத்தியர்களும், ஊழியர்களும் இரவுநேரக் கடமையின்போது வீட்டில் உறங்குவதாக இருந்தால் அவர்களுக்கு எதற்காக இந்தக் கடமை வழங்கவேண்டும்?

அவ்வாறு வீட்டில் உறங்குகின்றவர்களால் நோயாளிகளுக்கு எவ்வாறு அவசர சிகிச்சைகளை வழங்க முடியும்? இது சாத்தியமாகுமா? அவர்கள் வீட்டிலிருந்து வருவதற்குள் நோயாளியின் நிலை என்னவாகும்? என்ற கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர்.

கடந்த காலங்களில் இருந்த பணிப்பாளர்களின் காலங்களில் இவ்வாறான சம்பங்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டு வந்ததாகவும்,

குறிப்பாக, தற்போது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பணிப்பாளராக இருக்கின்ற வைத்தியர் குணசிங்கம் சுகுணனின் காலப்பகுதில் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகள் உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகள், நிறுவனங்கள் போன்றவற்றின் செயற்பாடுகள் மிகச் சிறப்பாகவும், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என்ற பாகுபாடின்றியும், குறை நிறை காணப்படுமிடத்து அவை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொடுக்கும் பணிப்பாளராகவே காணப்பட்டு வந்தார் என்று நோயாளிகளும், பொதுமக்களும், வைத்தியர்களும், உத்தியோகத்தர்களும், சுகாதார உழியர்களும் இன்றுவரை அவரின் செயற்பாடுகளை பாராட்டி புகழ்பாடி வருகின்றனர்.

ஆனால், தற்போதுள்ள கல்முனை பிராந்திய பணிப்பாளர் இதைக் கண்டும் காணாதவர் போன்று செயற்பட்டு வருவதாகவும், வைத்தியர்கள், உத்தியோகத்தர் மற்றும் ஊழியர் என்ற பாகுபாட்டுடன் நடந்து வருவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமாத்திரமன்றி வைத்தியர்கள் தவறு செய்தால் அவர்களை கண்டுகொள்ளாமலும், ஊழியர்கள் தவறு செய்தால் அதற்கு உடனடி நடவடிக்கையை மனச்சாட்சிக்கு விரோதமாக எடுத்துவருவதாகவும் சுகாதார ஊழியர்கள் விசனத்துடன் கவலையைத் தெரிவிக்கின்றனர்.

கல்முனை பிராந்தியத்தில் தொடராக இடம்பெற்றுவரும் இவ்வாறான அவலநிலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படியில்லை என்றால் எங்களது பிராந்தியத்திற்கு சிறந்த பணிப்பாரை நியமிக்கக் கோரிய ஆர்ப்பாட்டத்தை மிக விரைவில் மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் என்று பொதுமக்கள் விசனத்துடன் தெரிவிக்கின்றனர்.

பைஷல் இஸ்மாயில்

No comments: