News Just In

7/15/2022 06:27:00 AM

மட்டக்களப்பு நகரில் குறுந்தூர இலகு கட்டண பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது!

மட்டக்களப்பு நகரில் பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு இலகு கட்டணத்தில் குறுந்தூர பஸ் சேவை ஒன்றை மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இதன்படி குறித்த பஸ் சேவையை மட்டக்களப்பு மாமாங்கம் லூர்து மாதா கிறிஸ்தவ தேவாலய முன்றலில் ஆரம்பித்து பார் வீதி வழியாக அரசடி சந்தி, மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் வழியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வீதியினூடாக பயணித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஊடாக மட்டக்களப்பு நகருக்குள் வந்து மீண்டும் மட்டக்களப்பு மாமாங்கம் சித்திவிநாயகர் இந்து கோவிலடியில் சேவை நிறைவு பெறவுள்ளது .

இந்த புதிய சேவையை இலகு கட்டணத்தில் மக்களுக்கு பொருளாதார சுமையிலிருந்து நீங்கும் பொருட்டும் சிறுவர்களுக்கு 40 ரூபாயும் பலருக்கு 50 ரூபாயும் என்ற அடிப்படையில் கட்டணம் அறவிடப்படும் அதனுடன் இந்த சேவை தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

இந்த இலகு கட்டண குறுந்தூர நகர பஸ் சேவையினை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆகியோர் நேற்று (14.07.2022) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ் சுகுணன் மட்டு மாநகர சபை உறுப்பினர்கள் பொதுநல அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த குறுந் தூர நகர பஸ் சேவை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் மக்கள் இலகுகட்டணத்தில் மட்டக்களப்பு நகருக்கு பிரவேசிப்பதற்கு வசதிகள் கிட்டியுள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார். இந்தச் சேவை தொடர்ச்சியாக நடைபெறத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தாம் முடிந்த நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு கருத்து வெளியிட்டார்.

(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)




No comments: