News Just In

6/27/2022 06:26:00 PM

மாநகர எல்லைக்குள் மாணவர்களுக்கென தனியான துவிச்சக்கர வண்டிப் பாதையினை நடைமுறைபடுத்துவது தொடர்பில் பாடசாலை சமூகங்களுடன் கலந்துரையாடல்

சிறுவர் சிநேக மாநகர கட்டமைப்பின் கீழ், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதிப்படுத்தும் வகையில் துவிச்சக்கர வண்டிப் பாதைக்கான ஒதுக்கீட்டு ஒழுங்குகளை மேற்கொள்வது தொடர்பில் பாடசாலை சமூகங்களுடனான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இன்று (27) இடம்பெற்றது.

சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது யுனிசெப் மற்றும் செரி (CERI) நிறுவனங்களுடன் இணைந்து சிறுவர் நேய மாநகர செயற்றிட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் மாணவர்களின் தேக ஆரோக்கியத்தினையும், பாதுகாப்பான பயணத்தினையும் உறுதிசெய்யும் வகையில் பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களின் நெருசலினை கட்டுப்படுத்துவதன் ஊடாகவும், ஒற்றைவழி பாதை ஒழுங்குகளை மேற்கொள்வதன் மூலமாகவும் மாணவர்களின் துவிச்சக்கர வண்டிப் பாதையானது சைகை பலகைகளின் காட்சிப்படுத்தலுடன் அமைக்கப்படவுள்ளது.

இதன்படி, ஆரம்பக்கட்டமாக புளியந்தீவு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு சென்று வரக் கூடிய வகையில் துவிச்சக்கர வண்டிகளுக்கென தனியான வழிப்பாதை ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இதன் சாத்திய கள நிலமைகளை ஆராய்ந்து ஏனைய பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக பாடசாலை சமூகங்களின் ஒத்துழைப்புகளை பெறும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட இக் கலந்துரையாடலில், பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்து பிரிவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பொறுப்பதிகாரி திரு.பி.பி.ஏ.சரத் சந்திர, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவிற்கான நிலையப் பொறுப்பதிகாரி திரு.எஸ்.கே.பின்னவல, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் .ஏ.எல்.எம்.சர்ஜீன், வைத்திய கலாநிதி கே.அருள்நிதி, செரி (CERI) நிறுவனத்தின் அதன் இணைப்பாளர் திருமதி.றினோஷா பிரசன்னா, திட்ட அலுவலர் திரு.மைக்கல் நிரோஷன் தேவராஜா, புளியந்தீவு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: