News Just In

6/20/2022 12:48:00 PM

நிலைபேறான நவீன தொழினுட்பக் கிராமங்களை உருவாக்கும் திட்டம் அமுலாக்கம்!




 ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

நிலைபேறான நவீன தொழினுட்பக் கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூரில் தெரிவு செய்யப்பட்ட விவசாய பயனாளிக் குடும்பங்களுக்கு பெரிய அளவில் விவசாய தொழினுட்ப ஊக்குவிப்பு உபகரணத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் நடுத்தர தோட்ட விவசாயிகள் 34 பேருக்கு ரூபாய் ஒன்றரை இலட்சம் தொடக்கம் ஆறு இலட்சம் ரூபாய் வரை பெறுமதியான விவசாய தொழினுட்ப உபகரணத் தொகுதிகள் ஞாயிற்றுக்கிழமை 19.06.2022 வழங்கி வைக்கப்பட்டன.

முற்றிலும் மானிய அடிப்படையில் பலசெயற்பாட்டு களை சுத்தப்படுத்தும் உபகரணம், நீரிறைக்கும் இயந்திரம் , நீர்க் கொள்கலன்கள் , விதை மற்றும் பயிர் நடுகை இயந்திரம் உள்ளிட்ட இன்னும் பல 17 தொழினுட்பங்களை உள்ளடக்கிய உபகரணத் தொகுதிகள் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் விவசாய தொழினுட்ப ஊக்குவிப்பு உபகரணத் தொகுதிகளை பயனாளிகளான விவசாயிகளுக்கு வழங்கி வைத்து உரையாற்றிய விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிரீன் , நெல்லரிசிச் சோற்றுடன் உப உணவுப் பயிர்களையும் பயிரிட்டு உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வதன் மூலமே எதிர்வு கூறப்படுகின்ற உணவு நெருக்கடியைத் தவிர்த்துக் கொண்டு பஞ்சம் பசி பட்டினியின்றி நாம் எதிர்காலத்தில் வாழ முடியும் என்றார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் , ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் , சுற்றாடல் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ஏ. அப்துல் நாஸர் , இணைப்பாளர் எம்.ஐ. தஸ்லீம் , விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். தேவரஜனி , பயிற்சி அலுவலர் ஸ்டெபரீன் ராகெல் உட்பட நடுத்தர தோட்ட விவசாயிகள் , கமக்காரர் அமைப்பின் வீட்டுத் தோட்ட விவசாயப் பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments: